மதுரை, நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  


பின்னர், மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ தமிழ்நாடு இந்தாண்டு வரலாறு காணாத அளவு நெல் மற்றும் தானிய உற்பத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மறுபுறம், யாரும் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக நெல்பேட்டை சமையற்கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவு பிஞ்சுக்குழந்தைகளுக்கு செல்கின்றது.





இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை அறிந்து, ஆதிமூலத்திலே தீர்வு காண வேண்டும். அந்த முயற்சியில் ஒருபகுதியாகவே இந்த ஆதிமூலம் பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கியுள்ளோம். இன்றைய நாள் என் வாழ்நாளில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பின் காலை உணவுத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக ஆய்வுகள் கருதுகிறது.


வறுமையினாலோ, சாதியினாலோ கல்வி ஒருவருக்கு தடையாக இருக்கக் கூடாது என பெரியார், அண்ணா, கலைஞர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் செயல்பட்டு வருகிறேன். 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் உண்மையான சத்துணவை வழங்கினார். பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அதிகாரிகளின் ஆலோசனைப் படி காலை உணவை கொண்டு வந்துள்ளோம்.




காலை உணவுத் திட்டம் அரசின் கடமையாகவும், என்னுடைய கடமையாகவும் எண்ணுகிறேன். இதை செலவாக நினைக்கவில்லை. கலைஞரின் மகனின் அரசு கருணை உடைய அரசாக செயல்படும். அரசு காலை மற்றும் மதிய உணவை வழங்குகிறது. எனவே கவலை இன்றி மாணவர்கள் படிக்க வேண்டும். தமிழகத்தின் வறுமையை போக்க, மாணவர்களின் பசியைப் போக்க தமிழக அரசு செயல்படும்."


இவ்வாறு அவர் பேசினார். 


இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் எ.வ.வேலு  , அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முன்பு, நெல்பேட்டையில் சிற்றுண்டிகள் தயாராகும் இடத்திற்கு நேரில் சென்று உணவுகளை சுவைத்துப் பார்த்த ஆய்வு செய்தார். பின்னர், நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.


இதைத்தொடர்ந்து கமலாத்தாள் பாட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கவுரவித்தார்.