தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். ரசிகர்களால் STR என அழைக்கப்படும் சிம்பு , பலவிதமான விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் விதமே அவரை ரசிகர்கள் கொண்டாட காரணம். சில காலங்கள் சினிமா வாய்ப்புகள் பெரிதும் இல்லாமல் இருந்த சிம்பு, உடல் எடையை குறைத்து “ ஈஸ்வரன்” படம் மூலம் கம் பேக் கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை சிம்புவிற்கு கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்திற்கான சிம்புவின் மெனக்கெடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவுடன் சிம்பு இணைந்திருக்கும் அடுத்த படமான ‘மாநாடு’ மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளது. மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ் புரடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் சிம்பு இன்று (ஆகஸ்ட் 1) தனது ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிவனை வழிப்பட்டு கொண்டிருக்கும் போது அவரின் நண்பர்கள் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். அதனை பதிவிட்டு சிம்பு “ நன்றி இறைவா !” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்டதாம். இதற்கு #OmNamahShivaya #Atman #SilambarasanTR என்ற ஹேஷ்டேகுகளை சிம்பு கொடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 6 வருடங்களுக்கு முன்னர் இதே கோவிலில் சிம்பு தரிசனம் செய்த புகைப்படங்களை ஒப்பிட்டு அவரின் மாற்றங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிம்பு தற்போது வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கும்’ நிதிகளிலே நீராடும் சூரியன் ’படத்தில் நடித்து வருகிறார். சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம் , அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் . இது தவிர கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்படதாக கூறப்படுகிறது.