சென்னை, கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்தவர் தயாநிதி. அவருக்கு வயது 43. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் , கடந்த 28-ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தயாநிதியும் சென்னையில் ஒரு பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் ஆர்ப்பாட்டத்தை செய்தியாக சேகரித்தார் அந்த செய்தியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.


அந்த செய்தியை அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஷேக் அலி என்பவர் தான் உள்ள விஜிலென்ஸ் ஆப் இந்தியா என்ற வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த அமைப்பின் நிறுவனரான முத்தையா என்பவர் செய்தியாளர் தயாநிதி மீது வாட்ஸ் அப் குழுவில் மிகவும் அவதூறாக கருத்து பதிவிட்டார். மேலும், செல்போன் மூலமாக செய்தியாளர் தயாநிதியை மிரட்டி அவருக்கு மிரட்டும் தொனியிலும் பேசியுள்ளார்.




பின்னர் 10 பேர் கொண்ட கும்பல்களுடன் நரசிங்கபுரத்தில் இருந்த செய்தியாளர் தயாநிதியை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது, அவரை தரக்குறைவாக பேசி மிரட்டியதுடன் அவரை தாக்கியுள்ளனர். மேலும், தயாநிதியின் இருசக்கர வாகனத்தையும் அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.


இதையடுத்து, முத்தையா மீது தயாநிதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் முத்தையா மீது 294(பி), 341, 323, 384, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை உடனே கைது செய்தனர். காவல்நிலையத்தில் முத்தையாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




அப்போது, போலீசார் விசாரணையின்போது முத்தையா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது  செய்தியாளர் ராஜ்குமார் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்ததை கிண்டி காவல் உதவி ஆய்வாளர் செய்தியாளர் ராஜ்குமாரின் செல்போனை பறித்துள்ளார். மேலும், வீடியோவை உடனே அழிக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.


பின்னர், உயரதிகாரிகளிடம் செய்தியாளர்கள் புகார் தெரிவித்தபிறகு செல்போனை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கியதாகவும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முத்தையா சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் கூறினர்.