மாநாடு படத்தை முடித்து கொடுத்த கையோடு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதும் , அந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். சிம்புவின் 47-வது படமான உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது.
STR , GVM கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு ’என பெயர் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. இதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தார். மிகவும் மெலிந்து 17 வயது சிறுவன் போல இருந்தார். பலர் சிம்புவின் புதிய ஸ்டில்லை பாராட்டினாலும், இது உண்மையாகவே சிம்புவா அல்லது கிராபிக்ஸ் சிம்புவா எனக் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பதிலளித்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. போஸ்டரில் உள்ளது போலவே மெலிந்து போய் காணப்படுகிறார். ஏற்கெனவே உடலை வெகுவாக குறைத்து மீண்டும் திரைத்துறையில் கால்பதித்த சிம்பு, மேலும் 15 கிலோ வரை இந்த படத்துக்காக குறைத்துள்ளாராம். சிம்புவின் இந்த அர்ப்பணிப்புக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் எந்த காலத்திற்கும் ஃபிரஷ் ஃபீலை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது உருவாக உள்ள 'வெந்து தணிந்தது காடு ‘படம் இந்த STR , GVM கூட்டணியின் மூன்றாவது படம் . இவர்களில் முந்தைய படங்களுக்கு இசையமைத்த எ.ஆர்.ரஹ்மானே வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இசையமைக்க உள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.