திரைப்பட ரசிகர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் கனவுக் கன்னியாக இருப்பார்கள். அப்படி 80, 90களில் பிறந்த திரைப்பட ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா தான். மிக மோசமான நிலையில் இருந்து, திரைத்துரைக்குள் நுழைந்து உச்சத்தைத் தொட்ட நடிகைகளில் முக்கியமானவர் சில்க்ஸ்மிதா தான். சில்க் ஸ்மிதாவுக்காகவே ஓடிய பல படங்கள் உண்டு. அவரது பாடலுக்காக படங்களை பார்த்தவர்கள் உண்டு. சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு ஆடினால் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நிலை இருந்த காலமும் உண்டு. கவர்ச்சியை மட்டும் காட்டியிருந்தால் பாதியிலேயே காணாமல் போயிருப்பார். ஆனால் அதே அளவுக்கு அவரிடம் இருந்த நடிப்புத் திறமை தான் அவரை புகழின் உச்சாணியில் கொண்டுபோய் வைத்தது. எந்த அளவுக்கு திரைத்துறையில் புகழ்பெற்றாரோ அதே திரைத்துறையால் அதே அளவுக்கு கொடுமைக்கும் உள்ளானார் என்பதும் சோக வரலாறு. உண்மையில் சில்க் ஸ்மிதாவின் ஆரம்பமே சோகமானது தான்.




1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் ஏலூரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் சில்க்ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. நான்காவது வரைதான் படித்திருந்தார். அவரது குடும்பத்தினரை சூழ்ந்திருந்த வறுமைக்கு அவ்வளவு தான் படிக்க முடிந்தது. அழகாக இருந்ததாலேயே இளம் வயதில் பலதொல்லைகளுக்கு ஆளானார். இதனால், அவருக்கு சிறுவயதிலேயே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. திருமண வாழ்க்கையும் கசந்ததால் மிகுந்த ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட விஜயலட்சுமி புதுவாழ்க்கைத் தேடி சென்னை வந்துவிட்டார். விஜயலட்சுமி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு அவரது பூர்வீகம் கரூர் என்பதும் ஒரு காரணம். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடல்லவா. விஜயலட்சுமியையும் அணைத்துக்கொண்டது.




திரைப்படங்களில் வாய்ப்புத் தேடி அழைந்து கொண்டிருந்தார் விஜயலட்சுமி. கடைசியில் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவரை ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார் நடிகரும் இயக்குநருமான வினுசக்கரவர்த்தி. சில்க்கின் அழகில் ரசிகர்கள் மயங்க விஜயலட்சுமியின் பெயர் சில்க் ஸ்மிதா என்றே வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது.


வண்டிச்சக்கரம் திரைப்படத்திற்குப் பிறகு அவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த பெரும்பாலானவை கவர்ச்சி வேடங்களே.  ரஜினி, கமல், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் சில்க் ஸ்மிதா நடித்திருக்கிறார். சில்க்ஸ்மிதாவின் கவர்ச்சியே பின்னாளில் அவருக்கு பெரும் பாரமானது. ஆனால், அந்த கவர்ச்சி தான் அவருக்கான இடத்தை திரைத்துறையில் பெற்றுத் தந்தது என்பதால் அதை ஏற்று நடித்தார் சில்க். ஆசை நூறுவகை, அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி, நேத்து ராத்திரி யம்மா, தொட்டுக்கவா உன்ன தொட்டுக்கவா, பட்டு வண்ண ரோஜா உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களை கிரங்கடித்தன. சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்கிய திரை ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர். இதனால் அவர் தென்னாட்டு மர்லின் மன்றோ என்று அழைக்கப்படுகிறார். 




சில்க் ஸ்மிதா சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும், அரசியலில் அவருக்கு ஆர்வம் அதிகம். சோவியத் புரட்சி, மாக்ஸிம் கார்க்கி, காந்தி, நேரு, பகத்சிங், ஷேக் அப்துல்லா, 1948-ல் நடந்த தெலுங்கானாப் புரட்சி, ராஜேஸ்வர ராவ், பி.டி.ரணதிவே, அடக்குமுறைகள் ஆகியவற்றை பற்றியெல்லாம் ஆர்வமாக பேசுவாராம். நீங்கள் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்று சில்க் ஸ்மிதாவிடம் கேட்டபோது, இத்துறைக்கு வரவில்லை என்றால் நக்ஸலைட் ஆகியிருப்பேன் என்றிருக்கிறார் சில்க்.


திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தாலும், சிறுவயதில் இருந்த வறுமை திரைத்துறைக்கு வந்தபின் இல்லாவிட்டாலும் சில்க்கின் வாழ்வில் ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. காதல் தோல்வி, பாலியல் தொல்லை, கடன் பிரச்சனை என்று தொடர் மன அழுத்தத்தில் இருந்தார். எல்லாம் போதும் என்று முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ 1996ல் சென்னையில் உள்ள அவரது அடுக்கு மாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உடலைப் பெற்றுக்கொள்ள யாரும் வராததால் அனாதைப் பிணமாக வைக்கப்பட்டிருந்தார் சில்க. பின்னர் அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனர். 




சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் வெளியானது. மிலன் லூத்ரியா இயக்கத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ல் வெளியான இந்த திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இருந்தாலும் ஆயிரம் பொன்; செத்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அந்த பழமொழிக்கு சிறந்த உதாரணமாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் பின்னர் வெளியானது.


சோகமாகவே தொடங்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை சோகமாகவே முடிந்துவிட்டது. என்றாலும், திரைத்துறைக்குள் நுழைந்த குறைந்த காலத்திலேயே சுமார் 450 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். அவருக்கு கவர்ச்சியல்லாத வேடங்களில் நடிக்க விருப்பம் இருந்தது. ஆனால், அவரை தேடி வந்தது கவர்ச்சி வேடங்கள் தான். கவர்ச்சி வேடங்களில் நடிப்பது குறித்து அவ்வபோது கவலைபப்டுவாராம் சில்க். ஆனால், ரசிகர்களுக்காக அந்த வேடங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். சில்க் இறந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் பிறந்தநாளோ, நினைவு நாளோ சில்க் யாருக்காக நடித்தாரோ அவர்கள் தான் இன்னமும் மறக்காமல் கொண்டாடுகின்றனர். சில்க் உடலளவில் இறந்திருக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.