நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 






சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. 






எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அப்பாவி இளைஞன், ரவுடி, கேங்ஸ்டர் என 3 பரிணாமங்களில் சிம்பு நடித்துள்ளார். அவரின் டிரான்ஸ்பர்மேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2  பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் முதல் படத்தில் சிம்பு கேங்ஸ்டர் ஆவது போல முடிவடைந்தது. 


இதனால் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுதொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் பாகத்தில் சிம்புவை கொல்ல வரும் ஜாபர் அவரை கொல்லாமல் சென்றிருப்பார். இந்த வீடியோவில் அந்த காட்சியைக் காட்டி உன்ன கொல்லாம விட்டதுக்கு காரணம் இருக்கு முத்து என அவர் சிம்புவிடம் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. 






அதேபோல் சிம்புவின் நண்பராக வந்து எதிரணியில் இருக்கும் ஸ்ரீதர் கையில் துப்பாக்கியுடன் சிம்புவை தேடி வரும் காட்சிகளும் உள்ளது. இதனால் இவர்கள் 3 பேருக்குள்ளும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில், 2 ஆம் பாகத்தில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் வைக்குமாறும் இயக்குநர் கௌதம் மேனனை சிம்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.