பரபரப்பான நகர்வில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் ஷோ நகர்ந்து கொண்டிருக்கிறது. காடர், வேடர் அணியின் முதல் வார எலிமினேஷன் நேற்று நடந்த நிலையில் ,இரு அணிகளும் பலவீனமான ஒரு போட்டியாளரை தேர்வு செய்திருந்தனர். இந்நிலையில், காடர், வேடர் அணிகளின் லீடர்கள் காயத்ரி மற்றும் லெட்சுமி ப்ரியாவை தனியாக அழைத்த அர்ஜூன், அவர்கள் இருவருக்கும் ஓட்டளிக்கும் உரிமை தந்தார். அது ரகசிய ஓட்டாக வைக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளும் அழைக்கப்பட்டு, தனித்தனியாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது.






அதில் காடர் அணியில் ராம் மற்றும் இந்திரஜா ஆகியோர் அதிக ஓட்டுகளை பெற்றனர். குறிப்பாக ராம் அதிக ஓட்டுகள் பெற்றார். அதே போல வேடர் அணியில் நடந்த ஓட்டெடுப்பில் பார்வதி மற்றும் சிருஷ்டி ஆகியோர் அதிக ஓட்டுகள் பெற்றனர். அதில் பார்வதி அதிகபட்ச ஓட்டு பெற்றார். இந்நிலையில் திடீரென தலைவர்கள் அளித்த ரகசிய ஓட்டுக்கு தான் பவர் என்றும், அவர்களே எலிமினேட் ஆவார்கள் என்றும் அர்ஜூன் அறிவித்தார். அதன் படி காடர் அணியில் லீடர் காயத்ரி ஓட்டளித்த இந்திரஜாவும், வேடர் அணியில் லெட்சுமி ப்ரியா ஓட்டளித்த சிருஷ்டியும் எலிமினேட் ஆவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இருவருமே குறைந்த ஓட்டு வாங்கியவர்கள். ஆனால் தலைவர்கள் தேர்வு என்பதால் அந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ப்து அவர்கள் படகில் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படாமல் வேறொரு தீவுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பின் அவர்களுக்கு ஒரு ஓலை கிடைத்தது. அதில் போட்டி இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவு பெற்றது. இந்நிலையில், பரபரப்பான 6வது நாள் எபிசோட் எப்படி இருந்தது என்று பார்ப்போம்....




இமியூனிட்டி சேலஞ்ச் டாஸ்க்!


இரு அணிகளிடமும் இப்போது அர்ஜூன் பேசுகிறார். பலவீனமான இருவர் வெளியேற்றப்பட்டதால் அணி பலமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? என கேட்டார். கலவையான பதில் அவருக்கு கிடைத்தது. இமியூனிட்டி சேலஞ்ச் அடுத்ததாக அணியினருக்கு வழங்கப்படும் என்று அர்ஜூன் தெரிவித்தார். ‛இமியூனிட்டி ஐடல்’ ஒன்றை அறிமுகம் செய்தார். அதோடு வாள் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு அது வழங்கப்படும் என்றார். இரு மிதவைக்கு நடுவே ஒரு தென்னை மரம் சாய்க்கப்பட்டு, அதில் குழுவாக கீழே விழாமல் நிற்க வேண்டும். அவர்களை ஒருவர் கடந்து செல்ல  வேண்டும். இது தான் போட்டி. தோல்வியடையும் அணியில் இருந்து ஒருவர் எலிமினேட் ஆனார். 




சிறப்பான வெற்றி பெற்ற வேடர்கள்!


விஜயலட்சுமி, ஐஸ்வர்யா இருவரும் இரு அணிகளில் முதலில் கடந்து சென்றனர். காடர் அணியில் துவக்கம் சிறப்பாக இருந்தது. அந்த அணியின் விஜயலட்சுமி முதல் கடத்தல் சிறப்பாக செய்தார். ஆனால் அதன் பின் வந்த சரண் சொதப்பியதால், மூன்று பேர் கடலில் விழுந்தனர். ஸ்லோவாக துவங்கினாலும், வேடர்கள் சிறப்பாக மிதவையை கடந்தனர். நன்றாக சென்று கொண்டிருந்த வேடர் அணியில் நந்தாவும், நாராயணனும் கீழே விழுந்தனர். இருந்தாலும் அவர்கள் அணியில் பெரும்பாலானோர் மிதவையை கடந்திருந்தனர். காடர் அணியில் 5 பேர் கடக்காமல் இருந்த நிலையில், வேடர் அணியில் அனைவரும் மிதவைக்கு திரும்பி அபாரமாக வெற்றி பெற்றனர். 


ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு அழைப்பு!


ராம் செய்த தவறுதான் தோல்விக்கு காரணம் என காடர் அணியின் லீடர் காயத்ரி தெரிவித்தார். அது குறித்து அணியினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ராம், சரண் ஆகியோரின் தவறுகள் தான் அந்த தோல்விக்கு காரணம். எனவே அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சரண் கூறினார். ட்ரைபிள் பஞ்சாயத்தில் தோல்வியடைந்த அணி தன்னை சந்திக்க வேண்டும் என அர்ஜூன் அவர்களிடம் கூறினார்.




இரண்டாவது டாஸ்கை வெற்றி பெற்ற வேடர் அணி, கூட்டு முயற்சியில் அந்த வெற்றியை பெற்றது. இதன் மூலம் இம்யூனிட்டி ஐடைலை வேடர் அணித்தலைவர் லெட்சுமி பெற்றார். இந்த வாள் இருப்பதால் வேடர் அணி எலிமினேஷனில் பங்கேற்காது என்று அர்ஜூன் தெரிவித்தார். 


காடர் அணியில் பற்றி எரியும் நெருப்பு!




தீவு திரும்பிய காடர் அணியினர், யாரை எலிமினேஷனுக்கு பரிந்துரைப்பது என ஆலோசித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ராம் பெயரை கூற முடிவு செய்தனர். ராம் கூட தன் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என தலைவர் காயத்ரியிடம் கூறினார். பின்னர் குழுவாக அவர்கள் ஆலோசித்த போது, தன்னால் தான் இந்த தோல்வி என ராம் பேசினார். அப்போது விக்ராந்த், சரண் உள்ளிட்ட மூன்று ஆண்களும் ஒன்றாக இருக்கிறார்கள் என்கிற கருத்தை ராம் கூறினார். அதற்கு விக்ராந்த் உள்ளிட்ட ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீங்கள் தனியாக இருப்பதற்காக எங்களை குழுவாக இருக்கிறோம் என்று கூறாதீர்கள் என ராம் மீது கடிந்தனர். பின்னர் இந்திரஜாவை நாமினேஷன் செய்த லீடர் காயத்ரியை, அந்த முடிவு தவறானது என விஜயலட்சுமி கூறினார். விக்ராந்தும் அதே கருத்தை தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விக்ராந்த்-காயத்ரி இடையே விரிசல் ஏற்பட்டது. 


பெசன்ட் ரவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்!




இதற்கிடையில் ராம் அனைவரிடத்திலும் நடிக்கிறார் என உமாபதி ராமையாவும்- லீடர் காயத்ரியும் தனியாக ஆலோசித்தனர். அனைவரும் சேர்ந்து ராம்மிற்கு எதிராக ஓட்டளிக்கலாம் என்று காயத்ரி கூறுகிறார். பின்னர் சரணிடம் காயத்ரி பேசினார். ‛எல்லோரும் ராம் பெயரை கூறுவதால் நான் கூறவில்லை... எனக்கு தனிப்பட்ட முறையில் ராம் பெயரை கூற தோன்றியது,’ என சரண் கூறினார். ஆனால் அவர் அதை சாதாரணமாக கூறவில்லை. இப்படியாக ஒரு வழியாக எலிமினேஷனுக்கு ராம் பெயரை பரிந்துரைக்கு ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் மகிழ்வான வேடர் தீவு காண்பிக்கப்பட்டது. வெற்றிக்காரணத்தை மட்டுமல்லாமல், எதிரணி ஏன் தோல்வி அடைந்தது என்றும் அவர்கள் ஆலோசித்தார்கள். பின்னர் சமையல் வேலையில் இறங்கினர். இந்நிலையில் பெசன்ட் ரவியின் 25வது திருமணநாளையொட்டி அவருக்கு ஆச்சர்ய ஓலை அனுப்பப்பட்டிருந்தது. அதில் அவரது மனைவியின் வீடியோ பதிவு இடம் பெற்றிருந்தது. அவரது மனைவியின் நெருக்கமான பேச்சை கேட்டு ரவி ஆனந்த கண்ணீர் விட்டார். சக போட்டியாளர்களும் அவருடன் சேர்ந்து மகிழ்ந்தனர்.




இதைத் தொடர்ந்து நாளை காடர் அணியில் ஒருவருக்கான எலிமினேஷன் அறிவிப்பு நடைபெறும் என இன்றைய எபிசோட் நிறைவு பெற்றது. அநேகமாக அது ராம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!