பலமுறை கிசுகிசுக்கப்பட்ட சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி திருமணம் இன்று (பிப்ரவரி 7) இனிதே நடைபெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.  கியாரா - சித்தார்த் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் கூறிக்கொண்டதில்லை. இந்தக் கேள்வியை இருவரிடமும் முன்வைத்தால், முதலில் இருவரும் வெட்கப்படுவார்கள், பின்னர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.


இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடந்துள்ளது. திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களின் கீழ் திரைப் பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். திருமணத்தை ஒட்டி மெக்ஸிகன், இத்தாலியன், சைனீஸ், அமெரிக்கன், பஞ்சாபி, ராஜஸ்தானி என 10 பிரபல உணவுவகைகளின் பல்வேறு பதார்த்தங்கள் செய்து படைக்கப்பட்டன. 






இந்தத் தம்பதிக்கு நடிகை ஜூஹி சாவ்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அந்த வாழ்த்துச் செய்தியில், அழகான தம்பதிகள். சிறப்பாக வாழ வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. கூல் கேப்டன் என பெயர் எடுத்த தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர். தற்போது பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 


கியாரா அத்வானி  இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை. 2014ல் வெளிவந்த ஃபுக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். திரைப்படத்தில் அறிமுகமாகும் முன் கியாரா அனுபம் மற்றும் ரோஷன் தனேஜா ஆகியோரிடம் நடிப்பிற்கான பயிற்சியை பெற்றார். 


 கியாரா அத்வானியின் தந்தை ஜகதீப் அத்வானி. அவரது தாயார் ஜெனீவ் ஜாஃப்ரி. ஜகதீப் அத்வானி ஒரு தொழிலதிபர். கியாராவின் இயற்பெயர் ஆலியா அத்வானி என்பதே.  இவர் திரைத்துறைக்காக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றினார்.  பிரியங்கா சோப்ராவின் அஞ்சனா அஞ்சானி திரைப்படத்தை, பார்த்து தனது பெயரை கியாரா என்று மாற்றிக்கொண்டார் என்ற தகவலும் உண்டு. பிரியங்கா சோப்ராவின் மிக பெரிய ரசிகை கியாரா அத்வானி


கியாராவின் தாய்வழி குடும்பத்தின் மூலம் பல பிரபலங்கள் இவருக்கு உறவினர் ஆவார்கள். நடிகர்கள் அசோக் குமார் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் முறையே, இவரது தாத்தா, பாட்டி  ஆவார்கள். அதே போன்று ஷாஹீன் ஜாஃப்ரி மற்றும் நடிகை ஜூஹி சாவ்லா இவருடைய அத்தையாவார்கள். இத்தனை அழகான, திறமையான பின்னணி கொண்ட கியாரா அத்வானியின் அழகையும் திறமையையும் யாரேனும் கேள்விக்குறியாக்க முடியுமா என்ன?


இத்தகைய பின்புலம் கொண்ட கியாரா ஒருமுறை அவர் அளித்தப் பேட்டியில் திரைத்துறையில் குடும்பப் பின்னணி இருந்தால் அது நிச்சயமாக நீங்கள் வாய்ப்பு தேடும் போது சரியான நபர்கள் முன் உங்களை நிறுத்தும். ஆனாலும் திரைத்துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இந்த பின்னணி எல்லாம் உதவாது. திறமை மட்டுமே பேசும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.