துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்க உள்ளதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் (Tim Cook ) அறிவித்துள்ளார். கூகுள் நிறுவனமும் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) தெரிவித்துள்ளார்.
துருக்கி - சிரியாவை உலுக்கிய பேரிடர் ரிக்டர் அளவில் 7.8 அளவில் பதிவான நிலநடுக்கம் இதுவரை பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவான மிக மோசமான ஒன்றாகும் என நில அதிர்வு நிபுணர்கள் கூறுகின்றனர். அனடோலியன் மற்றும் அரேபிய தட்டுகளுக்கு இடையில் 100 கிமீ (62 மைல்) க்கும் அதிகமான தொலைவில் நிலத்தில் பிளவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. சர்வதேச நாடுகள் இரு நாடுகளுக்கும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவங்கள் நிதியுதவி அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் தனது வேதனையை பதிவிட்டதுடன் நிதி அளிப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில். “துருக்கி- சிரியா நாட்டில் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். அவர்களுக்கு SOS அலர்ட் உதவிகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து செய்யும்” என்று கூறியுள்ளார்.
டிம் குக் தனது டிவிட்டர் அறிவிப்பில், உயிரிழந்தவர்களுன் குடும்பத்தினருடன் உடனிருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் பேரிடர் மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் :
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு திசையில் நில அதிர்வு ஏற்பட்டு மத்திய துருக்கி மற்றும் சிரியாவை நில நடுக்கம் உலுக்கியது.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, 1970 முதல் மூன்று பூகம்பங்கள் மட்டுமே ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கு மேல் பதிவாகியுள்ளன. ஆனால், 1822 இல், 7.0 நிலநடுக்கம் இப்பகுதியைத் தாக்கியது. இதில், 20,000 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது" என்றார்.
மோசமான நிலநடுக்கம் இது..?
சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 7.0 ரிக்டர் அளவில் 20-க்கும் குறைவான நிலநடுக்கங்களே ஏற்படுகின்றன. இதுகுறித்து விவரித்த இடர் மற்றும் பேரிடர் குறைப்புக்கான லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் ஜோனா ஃபாரே வாக்கர் கூறுகையில், "2016 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியைத் தாக்கி சுமார் 300 பேர் உயிரிழப்புக்கு காரணமான 6.2 நிலநடுக்கத்துடன் ஒப்பிடும்போது, துருக்கி-சிரியா பூகம்பம் 250 மடங்கு அதிக ஆற்றலை வெளியிட்டது. 2013 முதல் 2022 வரை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் இரண்டு மட்டுமே திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் அளவைக் கொண்டிருந்தன" என்றார்.