கோலிவுட் திரையுலகமே தளபதி என கொண்டாடும் உச்ச நடிகர் விஜய். விஜய் மிகுந்த சாதுவாக இருப்பார் என அவருடன் பழகிய பலரும் கூறக்கேட்டிருப்போம். ஆனால் சின்ன வயதில் விஜய் மிகுந்த சுட்டியாகத்தான் இருந்தார் என்கிறார் அவரது தாய் சோபா சந்திர சேகர். விஜய் ஆரம்பத்தில் விஜயகாந்தின் சின்ன வயது கேரக்டர்களில்  நடித்து குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். அப்போதெல்லாம் இவர் தமிழ் சினிமா கொண்டாடப்போகும் ஒரு நடிகராக வரப்போகிறார் என ஷோபனா எதிர்பார்க்கவில்லை என்கிறார். மேலும் விஜய்க்கு எப்போது நடிக்கும் ஆர்வம் வந்தது, அவர் தந்தையிடமே எப்படி வாய்ப்பு வாங்கினார் என்பது குறித்து விஜய்யின் தாயார் சோபா பழைய  நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.


 




அதில் "விஜய்யோட அப்பா உறவுகள் எல்லாமே இன்ஜினியர்ஸ், அதனால விஜய்யை டாக்டராக்க வேண்டும் என  ஆசைப்பட்டோம். அவர் நடிகர் ஆயிட்டார்.10 வயது வரைக்கும் விஜய் ரொம்ப சேட்டையாக , குறும்புத்தனத்தோடதான் இருந்தாரு. அதன் பிறகு ரொம்ப அமைதியாகிட்டாரு. அதற்கான காரணம் என்ன அப்படினு எங்களுக்கு தெரியலை. ரொம்ப கூச்ச சுபாவம் உடையவர், யாரையும்  நிமிர்ந்து பார்த்துக்கூட பேச மாட்டாரு.18 வயது வந்த பிறகுதான் எங்களுக்கு தெரியும் அவருக்கு நடிப்புல அதிக ஆர்வம் இருக்குனு. லயோலா கல்லூரியில முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது அவங்க அப்பாக்கிட்ட சொன்னாரு. நான் நடிக்கனும்னுதான் ஆசைப்படுறேன். நீங்களே என்னை அறிமுகப்படுத்துறீங்களா இல்லை நான் உங்க பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தேடிக்கொள்ளவா அப்படினு கேட்டதும் எங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருந்தது. உடனே எங்க ஏதாவது பண்ணிக்காட்டு என்றதும் அண்ணாமலை படத்துல இருந்து ஒரு நீள வசனத்தை எடுத்து பேசிக்காட்டினாரு.அதன் பிறகு நாளைய தீர்ப்புல அவங்க அப்பாவே அறிமுகப்படுத்தினாரு. ரசிகன் படத்திற்கு வாய்ப்புகள் வந்தது. பூவே உனக்காக படத்துலதான் விஜய்க்கு நிறைய பெண் ரசிகர்கள் வந்தார்கள் . நானே அந்த படத்தை 25 தடவை பார்த்தேன்.எனக்கு அந்த படம் அவ்வளவு பிடிச்சது. கிளைமேக்ஸ் ரொம்ப பிடிக்கும் . விஜயை அந்த படத்துல பார்க்க ரொம்ப பெருமையாக இருந்தது. சாஃப்ட் ஹீரோவாக விஜய் பண்ண திரைப்படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.  விஜயோட அம்மா அப்பானு சொல்லுறது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் .”என விஜய்யின் அறியாத பக்கங்களை ஷேர் செய்துள்ளார். விஜய் சில நேர்காணல்களில் தனக்கு சினிமா வாய்ப்பு  அப்பா இயக்குநராக இருந்ததால் எளிமையாக கிடைத்துவிட்டது என வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அவர் மிகப்பெரிய அவமானங்களையும் சவால்களையும் சந்தித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.