மதயானை கூட்டம்  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மண் சார்ந்த ஒரு கதை மாறுபட்ட ஒரு கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கயல் ஆனந்தி, தீபா, இளவரசு, சஞ்சய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்ய ஒளிப்பதிவு பணிகளை வெற்றிவேல் மேற்கொண்டுள்ளார். வரும் மே 12-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 



சமூக அக்கறை கொண்ட படம் :


ஒரு சமூக அக்கறையோடு உருவாகியுள்ள இப்படத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள அரசியலை பற்றி பேசும்  இப்படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளனர் படக்குழுவினர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 


நெருக்கடியில் உருவான படம்:


இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேசுகையில் "பெரும் நெருக்கடியில் உருவான படம் இது. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன், ஒரு நடிகர் என்பதை காட்டிலும் இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் நடிகர் சாந்தனு. இப்படம் நிச்சயம் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்"  என்றார். 


கஷ்டப்பட்டு நடித்தேன் :


'இராவண கோட்டம்' படத்தின் ஹீரோ சாந்தனு பேசுகையில் "சக்கரக்கட்டி படத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இப்படம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நடிப்பை தாண்டி இப்படத்தில் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டேன். அது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் படக்குழுவினரின் உதவி கிடைத்தது. ஒரு கிராமத்து பையனாக நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. காலில் ரத்தம் வரும் அளவுக்கு நடித்தேன். இதுவரையில் நான் எந்த ஒரு படத்திலும் இப்படி நடித்ததில்லை.  நான் மட்டும் கஷ்டப்படவில்லை அனைவருமே இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் இப்படத்தை ரசித்து எடுத்துள்ளார். இந்த தரமான படைப்பிற்கு நிச்சயம் நீங்கள் ஆதரவு  தர வேண்டும்" என பேசியிருந்தார் நடிகர் சாந்தனு.