Shanthanu Bhagyaraj: ப்ளூ ஸ்டார் படத்தால் தனது தந்தையின் ஆசை நிறைவேறியதாகக் கூறி நடிகர் சாந்தனு கண்ணீர் விட்டு பேசியது கேட்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. 

 

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் எஸ். ஜெயகுமார் இயக்கத்தில் உருவான ப்ளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்வி ராஜன், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர். படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளது. படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள நிலையில், அறிவு உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர். 

 

இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில், நடிகர்கள் சாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பா.ரஞ்சித், இயக்குநர் ஜெயகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய நடிகர் சாந்தனு, “என் லைஃப்ல இப்படி ஒரு நல்லது நடக்குதா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பல பரிசுகளையும் பெயரையும் வாங்கி கொடுத்துள்ளது. என் வாழ்க்கையில் கிடைக்காத வெற்றியை ப்ளூ ஸ்டார் கொடுத்தது. 

 

சக்கரக்கட்டி ரிலீசானதுக்கு பிறகு ஒரு வெற்றிப்படம் கிடைக்க 5,600 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. அந்த ஒரு வெற்றியை ப்ளூ ஸ்டார் படம் கொடுத்துள்ளது. என்னைவிட 100 மடங்கு என்னுடைய அப்பா, அம்மா தான் வெற்றிக்கான ஏக்கத்தில் இருந்தனர். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியால் எனது அப்பா, அம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. அவங்க முகத்தில் பார்த்த சந்தோஷத்துக்கு நன்றி” என பேசினார். 

 

மேலும் 15 ஆண்டுகளாக தனக்கு தனது அப்பாவுக்கும் இருக்கும் இடைவெளி குறித்து பேசிய சாந்தனு, பாக்கியராஜ் ஒரு தந்தையாக தனதுக்கு எழுதிய கடிதத்தை உருக்கமாக படித்துக் காட்டினார். அதில்,  ”உனக்கு சக்கரக்கட்டி படத்தில் எல்லாம் அமைந்தும், சக்சஸ் மட்டும் கிடைக்கல. அடுத்தடுத்து தோல்வி இருந்ததால் நானும் அம்மாவும் ரொம்ப டிஸ்டர்ப் ஆனோம். நீயும் விடாமல் முயற்சி செய்தாய். ஆனாலும், உன்னோட முதல் இன்ட்ரஸ்டான கிரிக்கெட்டை விடாமல் அடிக்கடி விளையாடிக்கிட்டே இருந்தாய். 

 

ஆனால் இப்போ ப்ளூ ஸ்டார் படத்தில் கிரிக்கெட் பிளேயாரா கேரக்டர் அமைந்து உன்னை பேச வைத்துள்ளது. அதற்காக படக்குழு எல்லாருக்கும் எனது நன்றி. வெற்றிகள் உன்னை தொடரட்டும்.. அன்புடன் பாக்கியராஜ்” என வாழ்த்து கூறியுள்ளார். என்னுடைய அப்பா எனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார். அந்த வெற்றி ப்ளூ ஸ்டார் படம் மூலம் கிடைத்துள்ளது. இதற்காக எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி” என கண்கலங்கி எமோஷனலாகப் பேசியுள்ளார்.