இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகாரை தொடர்ந்து இன்று மேற்குவங்கம் சென்றடைந்தது.


ராகுல் காந்தி வாகனத்தின் மீது தாக்குதல்:


மேற்குவங்கம் மாநிலம் மால்டாவில் நுழைந்த வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் வாகனத்திற்குள் ராகுல் காந்தி பயணிக்கவில்லை. வெளியே இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனத்தின் பின்புற ஜன்னல் முற்றிலுமாக உடைந்துவிட்டது. ஆனால், ராகுல் காந்திக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், "எங்கள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் யாத்திரை தடுக்கப்படாது. இந்திய கூட்டணி தலைவணங்காது. இந்திய கூட்டணியை வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்று மேற்குவங்க முதலமைச்சர் கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன்" என்றார்.


மேற்குவங்கத்தில் பரபரப்பு:


 









தாக்குதல் தொடர்பாக பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "எந்த நடந்தாலும் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. கண்டுகொள்ளாமல் இருப்பதால் நிறைய நடக்கலாம். இது ஒரு சிறிய சம்பவம். ஆனால், ஏதாவது நடந்திருக்க வாய்ப்புள்ளது" என்றார்.


இதேபோன்று, அஸ்ஸாம் மாநிலத்தில் யாத்திரையின்போது, ராகுல் காந்தி வாகனம் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியினர் குற்றம் சுமத்தினர். அஸ்ஸாம் வடக்கு லக்கிம்பூர் நகரத்தில் ராகுல் காந்தியின் யாத்திரையை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். ஆனால், அந்த போஸ்டரை பாஜகவினர் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


தற்போது, யாத்திரையின் ஒரு பகுதியாக மால்டாவை தொடர்ந்து, முர்ஷிதாபாத் மற்றும் பிர்பூமின் ஆகிய பகுதிகளுக்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார். மேற்குவங்கத்தை பொறுத்தவரையில், மால்டாவும் முர்ஷிதாபாத்தும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.


காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் INDIA கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரண்டு கட்சிகளிடையே சுமூகமான உறவு நிலவவில்லை. இதனால், ராகுல் காந்தி யாத்திரையில், மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா கலந்து கொள்ளவில்லை.