தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில், ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் சுல்தான். தற்போது, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் படத்தின் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படமான ‘விருமன்’படத்தில் இணைந்துள்ளார். படத்தை நடிகர் கார்த்தியும் அண்ணனும் நடிகருமான சூர்யாவிற்கு சொந்தமான 2டி எண்டர்டெய்ன்மண்ட் தயாரிக்கிறது.படத்தின் ஷூட்டிங் வருகிற 18 ஆம் தேதி தேனி சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 




 இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரபல இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.  இவரை சூர்யா ட்விட்டர் வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்திருந்ததையும் பார்த்தோம். அதேபோல விருமன் படம் மூலமாக அறிமுகமாகும் அதிதி ஷங்கருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அதிதி  ஆசி பெற்றுள்ளார் அதிதி ஷங்கர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அதிதி ஷங்கர் “ விநாயகர் சதுர்த்தியான நேற்று , ஒன் அண்ட் ஒன்லி தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றேன் “ என தெரிவித்துள்ளார். 






விருமன் படம் முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படம் .இந்த படத்தில் அதிதி ஷங்கர் தாவணியில் வலம் வருவார் என தெரிகிறது. கார்த்தி முன்னதாக ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் கிராமத்து நாயகனாக வலம் வந்தார். இந்த படத்தையும் சூர்யாவே தயாரித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சூர்யா, கார்த்தி படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின்  அறிமுக படமான பருத்தி வீரனும் கிராமத்து சப்ஜெக்டை கொண்டே வெளியானது. அதில்  வட்டார வழக்குடன் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி. விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விருமன் படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.