இன்று ஆர்.ஆர்.ஆர், கே.ஜி. எஃப், பாகுபலி உள்ளிட்ட பிரமாண்டமான படைப்புக்களை கொண்டாடலாம். ஆனால் 26 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த பிரமாண்டத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியவர் இயக்குநர் ஷங்கர். 1998ம் ஆண்டு அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், செந்தில், சுந்தரம் ராஜு, எஸ்.வி. சேகர், லக்ஷ்மி, நாசர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் படமாக சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற படம் 'ஜீன்ஸ்'. இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் உருண்டோடினாலும் இன்றும் அது ரசிகர்களுக்கு பிரெஷ் பீல் கொடுப்பது தான் அதன் வெற்றி.
வழக்கமான கதைக்களத்தில் பிரமாண்டம் :
அப்பா மற்றும் இரட்டை மகன்களுக்கிடையே இருக்கும் உறவு, இரட்டை மணமகள்களுக்கு தான் அவர்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவரின் பிடிவாதம், அதனால் சொல்லப்படும் பொய், உண்மை தெரிந்ததும் ஏற்படும் கலவரம், இது அனைத்தையும் கடந்து காதல் கைகூடியதா? என்பது தான் ஜீன்ஸ் படத்தின் கதை. வழக்கமான கதை தான் என்றாலும் பிரமாண்டமான காட்சி அமைப்பு, பிரமாண்டமான பாடல்கள், மெய்சிலிர்க்க வைக்கும் விஷுவல் எபக்ட்ஸ் என படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றார் இயக்குநர்.
டாப் ஸ்டாருக்கு ஜாக்பாட்:
அஜித், அப்பாஸ், பிரபுதேவா என பலருக்கும் சென்ற வாய்ப்பு ஏதோ சில காரணங்களால் கடைசியில் அது நடிகர் பிரஷாந்த் வெற்றி கோப்பைக்குள் வந்து அடங்கி ஜாக்பாட் அடித்தது. இன்றும் மக்கள் கொண்டாடும் அழகியான ஐஸ்வர்யா ராய் உடன் டூயட் பாடிய முதல் ஹீரோவும் அவரே.
பாடல்களில் டீடைலிங் :
ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுமே இன்றும் ஹிட் தான். பாடல்களின் காட்சி அமைப்பில் அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அவ்வளவு டீடைலிங் உள்ளது. அதிலும் அதிசயம் பாடல் மூலம் உலகில் உள்ள ஏழு அதிசயங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் இயக்குநர் ஷங்கர். இது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பாடல் படமாக்கப்பட்ட நாடுகளின் ராணி கெட்டப் போலவே ஐஸ்வர்யா ராய் கெட்டப் அணிந்து நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பஸ் கொலம்பஸ் பாடல் அமெரிக்காவின் பீச்சில் எடுக்கப்பட்டது போல இருக்கும் ஆனால் உண்மையில் அது பாண்டிச்சேரியில் தான் படமாக்கப்பட்டது. இப்படி அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அத்தனை டீடைலிங் கொடுத்து எடுத்து இருப்பார் ஷங்கர். அந்த மெனக்கெடல் தான் 26 ஆண்டுகளை கடந்து இன்றும் பேசவைக்கிறது.
தட்டி தூக்கிய விருதுகள் :
ஹாலிவுட் படங்களை காட்டிலும் அதிகமான நேரத்திற்கு விஷுவல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டதால் கின்னஸ் ரெகார்ட் செய்து அசத்தியது ஜீன்ஸ் திரைப்படம். மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 71வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த இசை மற்றும் சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் என இரண்டு பிரிவுகளின் கீழ் அந்த ஆண்டிற்கான தேசிய விருதை கைப்பற்றியது. உலகளவில் அன்றே பேசப்பட்ட ஜீன்ஸ் திரைப்படம் பல சாதனைகளை செய்து இன்றும் சிவப்பு கம்பளத்தில் வெற்றிநடை போடுகிறது.