உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று வரை கொண்டாடப்படுகின்றன. 


 



இந்தியன் 2:

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு பல தடைகளையும் கடந்து தற்போது தான் அது தயாராகி உள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக், மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 


'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  அதை தொடர்ந்து இன்று மாலை 7 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.  அதன்படி தற்போது 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  



டிரெயிலர் எப்படி?


இந்த நாட்டில் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை, போதுமான அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி பட திருடுபவர்களும், தப்பு செய்பவர்கள் மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அனைவரும் வாய்கிழிய இது சரியில்லை அது சரியில்லை என பேச மட்டுமே செய்கிறார்களே ஒழிய யாரும் ஒரு துரும்பை கூட ஆசைப்பதில்லை. அநியாயம் செய்பவர்களை பழிவாங்க ஹண்டிங் டாக் ஒன்று தான் வரவேண்டும்.


அப்படி வாழ்ந்த ஒருவர் தான் சுதந்திர போராளி உண்மையான இந்தியன் சேனாபதி. அவர் மீண்டும் வரவேண்டும். தப்பு செய்யும் போது அதில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று பயம் வரவேண்டும் என அநியாயங்களை துணிச்சலாக எதிர்க்கும் இளைஞர்களை வழிநடத்தி நேதாஜி வழியில் இரண்டாவது சுதந்திர போரை எதிர்கொள்கிறார் கமல்ஹாசன். 


 



பல பல வித்தியாசமான கெட்டப்புகளில் கலக்கும் கமல்ஹாசன் வர்ம கலையில் மிரட்டியுள்ளார். தப்பு செய்பவர்கள் சேனாபதியிடம் இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மிகவும் பரபரப்பான அனல் தெறிக்கும் காட்சிகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் வெளியாகி உள்ளது ஷங்கர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2 ' டிரைலர். 


இந்த படத்தில் கமல்ஹாசனை மிகவும் வயதானவராக காட்டுவதற்காக போடப்பட்டுள்ள மேக்கப் சில இடங்களில் அப்பட்டமாக தெரிகிறது. இதுபடத்தில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று படம் வெளியான பிறகே தெரிய வரும்.