18ஆவது மக்களவையின் முதல் அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்றிலிருந்து பதியவேற்று வருகின்றனர். அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், பிகார் மாநில எம்.பி.க்கள் முதல்நாளான நேற்று பதவியேற்றனர்.


'ஜெய் ஹிந்த்' என முழங்கிய ராகுல் காந்தி:


இதையடுத்து, இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மாநில எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி, எம்.பி.யாக பதவியேற்க வந்தார்.


அப்போது, பா.ஜ.க.வினர் கடும் முழக்கங்களை எழுப்பினர். கடும் கூச்சலுக்கு மத்தியில், அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி ஆங்கிலத்தில் பதவியேற்ற ராகுல் காந்தி, 'ஜெய் ஹிந்த்' மற்றும் 'ஜெய் சம்விதான் (constitution)' என முழக்கங்களை எழுப்பினார். உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பிக்களும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்களும் 'ஜெய் ஹிந்த்', 'ஜெய் சம்விதான்', 'ஜெய் பீம்' என குறிப்பிட்டு பதவியேற்றனர்.


அதிர்ந்த நாடாளுமன்றம்:


அதேபோல, தமிழ்மாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களும் அரசியல் சாசனம் வாழ்க, ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டு பதவியேற்றனர். அதில், 8 பேர் தமிழில் பதவியேற்ற நிலையில், கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. கே.கோபிநாத் மட்டும் தனது தாய் மொழியான தெலுங்கில் பதவியேற்று கொண்டார்.


 






மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பெரும்பாலான திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்று கொண்டனர். 


வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின், வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டு பதவியேற்று கொண்டார் திமுக எம்பி தயாநிதி மாறன்.


அதேபோல, ஒரே ஒரு திமுக எம்பி மட்டும் கனிமொழி வாழ்க என்று முழக்கமிட்டார். தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஶ்ரீகுமார் கனிமொழி பெயரை குறிப்பிட்டு பதவியேற்றார். எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வாழ்க என முழக்கமிட்டார் ராணிஶ்ரீகுமார்.