மெட்ராஸ்காரன்
தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார் மலையாள நடிகர் ஷேன் நிகம். ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’ . ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. ரங்கோலி படம் மூலம் கவனமீர்த்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக அமைத்துள்ளார்.
ஷேன் நிகம் முன்னதாக மலையாளத்தில் இஷ்க் , கும்பலங்கி நைட்ஸ் , ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடையேவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகியது சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நிஹாரிகா கொனிடெலா நாயகியாக நடித்துள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் கூட. தற்போது இப்படத்தில் இருந்து காதல் சடுகுடு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
காதல் சடுகுடு பாடல்
காதல் சடுகுடு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அலைபாயுதே படத்தில் ரஹ்மான் இசையமைத்த பாட்டுதான். அதே பாடலை மீண்டும் இப்படத்தில் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால் உண்மையான சம்பவம் இசை இல்லை. இந்த பாட்டை உருவாக்கியிருக்கும் விதம்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த பாடலும் பாடலில் நிஹாரிகாவைப் பற்றியும் தான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருக்கிறது.
மெட்ராஸ்காரன் படத்தின் டீசர் வெளியானபோது கூட படத்திற்கு இவ்வளவு கவனம் கிடைக்கவில்லை. தற்போது இந்த ஒரே பாடல் பெரியளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது.