சித்தார்த்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அடுத்தடுத்து தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து தன்னை தேர்ந்த நடிகனாக நிரூபித்தார். ரொமான்ஸ் கதைக்களங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா , காவியத் தலைவன் , எனக்குள் ஒருவன் , சித்தா போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்று தந்திருக்கின்றன. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தற்போது சித்தார்த் நடித்துள்ள படம் மிஸ்.யூ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. யூடியூபர் மதன் கெளரியின் நேர்காணலில் நடிகர் சித்தார்த் தான் சினிமாவிற்கு வந்த கதையை பகிர்ந்துகொண்டார். தான் சினிமாவிற்கு இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் தான் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
நடிப்பு எனக்கு ஒரு டிஸ்ட்ராக்ஷன்
" எனக்கு நினைவு தெரிந்து ஐந்து வயதில் இருந்தே நான் நிறைய படங்கள் பார்ப்பேன். வளர வளர சினிமா மீதான என் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது. என் குடும்பத்தில் யாருமே சினிமாவை சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் எனக்கான ஒரு வேலையை இங்கு மினிமம் கேரண்டியாக ஏற்படுத்திக் கொண்டுதான் நான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு நிறைய இயக்குநர்களிடம் பேசி அவர்களிடம் வாய்ப்பு கேட்டேன். அதிர்ஷ்டவசமாக மணிரத்னமிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. உண்மையை சொன்னால் நாம் ரொம்ப லக்கி. நான் வேலை செய்த முதல் படம் கண்ணத்தில் முத்தமிட்டாள். நான் போன முதல் ஸ்டுடியோ ஏ ஆர் ரெஹ்மான் , பார்த்த முதல் கவிஞர் வைரமுத்து , இப்படி எல்லாமே எனக்கு அமைந்தது.
இசைகலைஞனாகவதா இயக்குநராவதா என்பது தான் என்னுடைய குழப்பமாக இருந்தது. அதன் பிறகு சினிமாதான் என முடிவு செய்தேன். சினிமாவில் நடிக்கவே கூடாதுனு முடிவு எடுத்தேன். ஆனால் இன்று அதுதான் எனக்கு பெரிய டிஸ்ட்ராக்ஷனாக இருந்து வருகிறது. நான் சினிமாவிற்குள் வந்து 23 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றுவரை நான் ஒரு படம் எடுக்கவில்லை. " என சித்தார்த் தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க : Actor Karthi: சூர்யாவுடன் பிரச்சனையா? தனியாக வந்து உதயநிதியிடம் ஃபெஞ்சல் புயல்நிவாரண தொகையை வழங்கிய நடிகர் கார்த்தி!