அதில் அவர், “ ‘ஜெய்பீம்’ மனித வாழ்வில் இரத்தம் தோய்ந்த அத்தியாயம். இந்தியாவில் இன்னும் நிலவும் நிலப்பிரபுத்துவ சாதிய பாகுபாடு மற்றும் அரச பயங்கரவாதத்தின் நேரடிப் பிரதிபலிப்பாகும். உலகின் பல பாகங்களிலும் மனிதாபிமானமற்ற ஆதிக்கத்தின் அவலத்தை நாம் கண்டு வருகிறோம்.
நாட்டின் சிறைகளும் காவல் நிலையங்களும் அட்டூழியங்களை அரங்கேறி வருகின்றன. சுதந்திரம் பெற்று நீண்ட ஆண்டுகள் ஆகியும், அம்பேத்கர் தலைமையில் சமத்துவ அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்டவர்கள் வெளிச்சத்துக்கு வர முடியாமல் போனது, இந்தியாவின் ஆட்சிக் கொள்கையில் உள்ள குறைபாடுதான்.
ஏழை மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் நீதிபதி சந்துருவின் உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது ஜெய்பீம். லிஜோமோல் ஜோஸ் செங்கேணியாக வாழ்ந்துள்ளார். வலுவான பெண் கதாபாத்திரம் படத்தின் உயரத்தை உயர்த்துகிறது. மார்க்ஸ் என்னை அம்பேத்கரிடம் கொண்டு சேர்த்தார் என்று சொன்ன உண்மையான சந்துரு (நீதிபதி சந்துரு) நாட்டின் பெருமைக்குரியவர். மனித மனதையும், சாட்சியையும் கவர்ந்திழுக்கும் இந்தப் படத்தை உருவாக்கிய சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் நன்றி.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சூர்யா, மணிகண்டன், லிஜோமோல், பிரகாஷ் ராஜ் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கியிருக்கும் படம் ஜெய் பீம். ஜோதிகா&சூர்யா தயாரிப்பில் உருவான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்து கொன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ஜெய் பீம் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ராஜாக்கண்ணு மரணத்திற்கு நீதி பெற்று தந்த நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை லாக் அப் டெத்தை மையமாக வைத்து வெளியாகியிருந்தாலும் ஜெய் பீம் படம் இன்னமும் ஆழமாக அதனை பேசியிருக்கிறது. குறிப்பாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் இருளர் இன மக்களின் வாழ்வியலை வலியோடு காட்சிப்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடினர். ஜெய் பீம் படத்திற்கு பிறகு வெளியான அண்ணாத்த, எனிமி படங்களைவிட இப்படத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தது.
இந்தப் பட்டியலில் '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பர்', 'லகான்', 'தங்கல்', 'அந்தாதூன்' உள்ளிட்ட சில பாலிவுட் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இதுவரை இடம்பெற்றதில்லை.தற்போது முதல்முறையாக ஐஎம்டிபி பட்டியலில் ஜெய் பீம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம். 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பின் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 'தி ஷஷாங் ரிடம்ஷன்' படத்துக்கு 24 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால், 'ஜெய் பீம்' படத்துக்கு 53,000 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இருப்பினும் வரும் காலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.