இந்தாண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றன. இந்த இரு கட்சிகளுக்கு ஐ-பேக் நிறுவனம் தேர்தல் மற்றும் அரசியல் நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தது. அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் இந்த இரு கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி வியூகங்களை வகுப்பத்தில் முக்கிய பங்கு ஆற்றினார். தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு பலரும் அவரை பாராட்டி வந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வெப்சிரீஸ் ஆக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரின் 'ரெட் சில்லிஸ்' தயாரிப்பு நிறுவனம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் சந்திக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இந்த வேப்சிரீஸிற்கு பிரசாந்த் கிஷோர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த வேப்சிரீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதன் காரணமாக எப்போது இந்த வெப்சிரீஸ் தொடங்கப்படும். இதில் யார் நடிக்க உள்ளனர் என்பது தொடர்பான தகவலும் இன்னும் உறுதியாக வில்லை. 


இதற்கிடையே மும்பையில் நேற்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்த பிரசாந்த் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சந்திப்பிற்கு பின் ஷாருக் கானை பிரசாந்த் கிஷோர் சந்திப்பார் என்று கூறப்பட்டது. அப்போது இந்த வெப்சிரீஸ் தொடர்பாக இருவரும் பேசுவார்கள் என்று கருதப்பட்டது. 


முன்னதாக 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பிரசாந்த் கிஷோர், "நான் இதிலிருந்து(ஐ-பேக்) விலகப்போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ”திரிணாமுல் காங்கிரஸும் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஆனால் எனக்கு இடைவேளை தேவை. அதனால் இந்தப் பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம் என்று இருக்கிறேன். என்னால் இந்த வேலையை இனிமேல் செய்யமுடியாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 


நீண்ட நெடிய அரசியல் ஆலோசகர் பயணத்தை மேற்கொண்ட பிரசாந்த் கிஷோரின் கதை வேப்சிரீஸ் ஆக வெளியாகும் பட்சத்தில் அது பலரையும் ஈர்க்க கூடும். ஏனென்றால், அரசியல் ஆலோசகர் எவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். எனவே இந்த வேப்சிரீஸிற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!