நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் இணையதளத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்கள் நெட்டிசன்ஸில் ஒரு பகுதியினர்.


பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் திரைப்படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த  தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன்முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் இந்தியா முழுவதும் ஜவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன்முதலாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அனிருத், ஜவான் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.


ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை பலமடங்கு  அதிகரித்திருக்கும் நிலையில் நாளை உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் இதன் முன்பதிவு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்தியா முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும்  முன்பதிவில் மட்டும் சுமார் 125 கோடி ரூபாயை, ஜவான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இவ்வளவு வரவேற்பு இருக்கும் ஒரு படத்தை புறக்கணிக்க வேண்டும் என தற்போது இணையதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறது ஒரு பெரும் கூட்டம்.


என்ன காரணம்?


திடீரென்று ஜவான் படத்திற்கு உருவாகி இருக்கும் இந்த எதிர்ப்புக்கு மிகச்சரியான காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், ஜவான் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  சமீபத்தில் சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி பேசியதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சில இணையவாசிகள் யூகித்துள்ளார்கள்.






பப்ளிசிட்டி


அதே  நேரத்தில் வெறுப்பின் பெயரால் ஒரு சிலர் செய்யும் இந்த மாதிரியான செயல்களால் ஜவான் படத்திற்குதான் பப்ளிசிட்டி என்று மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு 1500 கோடி வசூல் செய்யும் என்றும் கூறிவருகிறார்கள் ரசிகர்கள்.


மேலும் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர், ஜவான் ரிலீசாவதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்