பாலிவுட் பாட்ஷா, பாலிவுட் கிங் கான் என அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 57 வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டை போலவே இந்த ஆண்டும் நேற்று நள்ளிரவில் வீட்டின் முன் திரளான ரசிகர்கள் கூடினர். ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் நடிகர் ஷாருக்கான் தனது வீட்டின் பால்கனியில் இருந்து பெற்றுக்கொண்டார்.
கிங் கான் லேட்டஸ்ட் ட்விட்டர் போஸ்ட் :
தொலைக்காட்சி மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகர் ஷாருக்கான் இதுவரையில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காக பிரமாண்டமான கட் அவுட்கள் வைத்து தங்களின் அன்பை தெரிவித்தனர். நள்ளிரவு கூடிய கூட்டம் போலவே இன்று காலையும் ஏராளமான ரசிகர்கள் ஷாருக்கான் வீட்டின் முன்பு கூடினர். தனது வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டே செல்ஃபீ எடுத்து கொண்டார் நடிகர் ஷாருக்கான். அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிங் கான் அதற்கு ஒரு அழகான குறிப்பையும் பதிவிட்டுள்ளார். "இது போன்ற ஒரு கடலுக்கு மத்தியில் வாழ்வது மிகவும் சிறப்பு. என் பிறந்தநாள் அன்று என்னை சுற்றிலும் நிறைந்துள்ள இந்த அன்பு கடலுக்கு மிக்க நன்றி. என்னை மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்ததற்கு மிக்க நன்றி... மற்றும் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார் ஷாருக்கான்.
வெளியானது பதான் டீசர் மற்றும் போஸ்டர் :
நடிகர் ஷாருக்கான் பிறந்த நாளான இன்று அவர் நடிப்பில் ஜனவரி 2023ல் வெளியாக தயாராகி வரும் "பதான்" படத்தின் போஸ்டர் ஒன்று பிறந்தநாள் பரிசாக இன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.