பங்களாதேஷ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தபிறகு புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்திய அணி அரையிறுதி சென்றுவிட்டதா இல்லையா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.


இந்தியா-பங்களாதேஷ்


டாஸ் ஜெயித்த பங்களாதேஷ் பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்க, ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.  இதையடுத்து பொறுமையாக ஆரம்பித்த கோலி கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை துவங்கினார். மளமளவென ரன் குவித்த இந்த ஜோடி விளையாடி துரிதமான ரன் சேர்க்கையில் ஈடுபட்டது. கேஎல் ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்து ஃபார்முக்கு திரும்பினார். அக்‌ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஒரு கேமியோ விளையாடி 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து 180 ரன்களை கடக்க உதவினார்.






தோற்கும் நிலையில் இந்தியா


20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி பேட்டிங் முடியும்போதே மேகம் கருத்து இருளத்துவங்க, இரண்டாம் பாதியில் ஆறு ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டது. அப்போதே ஆட்டத்தை நிறுதியிருந்தால் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும். ஏனெனில் அந்த நிலையில் இந்திய அணி டி/எல் முறையில் 16 ரன்கள் பின்தங்கி இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Auction : சூடுபிடிக்கும் ஐ.பி.எல். 2023 ஏலம்..! எப்போ நடக்கிறது..? எங்கு நடக்கிறது..? முழு விவரம் உள்ளே..!


டி/எல் முறையில் வெற்றி


ஆனால் அதன் பிறகு ஆட்டம் தொடர, ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழைக்கு பிறகு இந்திய அணி பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீச காற்று இந்திய அணி பக்கம் வீசத்துவங்கியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 



புள்ளிப்பட்டியல் மாற்றங்கள்


இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை முந்தி முதலிடத்திற்கு சென்றுள்ளது. வங்கதேசம் இரண்டு தோல்விகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அறையிறுதிக்குள் நுழைந்துவிட்டதா என்றால் முழுதாக இல்லை. நாளைய பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்க போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் இந்திய அணியின் அரையிறுதி கடைசி போட்டியை இந்தியா விளையாடும் முன்பே உறுதியாகும். ஆனால் பாகிஸ்தான் ஒரு வேளை வென்றால், இந்திய அணி ஜிம்பாப்வே போட்டியை வென்றாக வேண்டிய கட்டயத்திற்குள்ளாகும். ஜிம்பாப்வே அணி இந்த தொடரில் பல சர்ப்ரைஸ்களை அளித்து வருவதால் அந்த போட்டியை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது.