பிரபல இந்தி தொலைக்காட்சியின் தொடர், திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த நடிகர் ஷாநவாஸ் பிரதான் நேற்று காலமானார். 


மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  நடிகர் ஷாநவாஸ் பிரதான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்பதை அருகில் இருந்தவர்களிடம் கூறிய பிறகு தான் கீழே விழுந்துள்ளார் என கூறப்படுகிறது. உடனே அருகில் இருக்கும் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



சமீபத்தில் தான் நடிகர் ஷாநவாஸ் பிரதானுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அவருக்கு வயது 56. லவ் சுதா, எம்.எஸ். தோனி தி அன்டோல்டு ஸ்டோரி, ரேயீஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த திரைப்படம் குடா ஹபீஸ் 2020ம் ஆண்டு வெளியானது. திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியான இணைய தொடர்களிலும் கூட நடித்துள்ளார் ஷாநவாஸ்.  


நடிகர் சைப் அலி கான் நடிப்பில் வெளியான பந்தோம் திரைப்படத்தில் ஹபீஸ் சயீது என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்படத்தில் மும்பை தாக்குதல் பயங்கரவாதியாக நடித்திருந்ததால் அவருக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஷாநவாஸ் பிராதான் இறப்புக்கு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.