நடிகர் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ’வாத்தி’ படம் நேற்று  (பிப்ரவரி 17 ஆம் தேதி) வெளியானது. இதில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பெயருக்கு ஆசிரியர் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. 


ஆசிரியர் தரப்பில் இருந்து  எதிர்ப்பு


இதுகுறித்து புதுக்கோட்டை  முன்னாள் ஆசிரியரும் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியபோது, "வாத்தி" என்ற படத்தின் பெயர் பல லட்சக்கணக்கான ஆசிரியர்களின் மனதை வேதனைப்பட வைத்துள்ளது. எனவே இப்படத்தின் பெயரை மாற்றி ஆசிரியர்களின் கவுரவத்தை காக்குமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.


அதேபோல புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அந்த மனுவில், ’’மாதா, பிதா வரிசையில் தெய்வத்துக்கே முந்தைய இடத்தை ஆசிரியர்தான் பிடித்துள்ளார். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான சமூகம் ஆசிரியர்கள் சமூகம் ஆகும். 


நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படத்துக்கு, "வாத்தி" என்று பெயர் வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதே படம் தெலுங்கில் "சார்" என்ற பெயரில் வெளியாகிறது.


தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில், ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் "வாத்தி" என்று பெயரிட்டு வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் " வாத்தியார்" என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல "சார்" என்றோல் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சார்பாக , அமைப்பின் சார்பாகவும் தாங்கள் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் படம் ஆசிரியர்களை போற்றி இருப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர் சிகரம் சதிஷ் தெரிவித்துள்ளார். வாத்தி திரைப்படம் குறித்து எழுதியுள்ள விமர்சனம் இதோ.


’’ஒட்டுமொத்த வாத்தியார்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய படம் வாத்தி.


வெள்ளைச்சாமி என்று பெயர் வைத்தவர்களெல்லாம் வெள்ளையாய் இருப்பதுமில்லை.


கருப்பாயி எனப் பெயர் வைத்தவர்களெல்லாம் கருப்பானவர்களுமில்லை


எல்லாமே நிறம்தான் எல்லாமே அழகுதான்


அந்த வகையில் வாத்தி என்பது ஒரு சொல் வழக்கு.. அதில் வழக்காட வேண்டியதில்லை என்னும் கருத்தை முன்வைத்து எனது விமர்சனத்தை முன் வைக்கின்றேன்.


வாத்தி என்னும் பெயரில் வாத்தியார்களை தங்கத் தேரில் தாங்கிப்  பிடித்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காக படத் தயாரிப்புக் குழுவிற்கும், இப்படி ஒரு படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுசுக்கும் எனது வாழ்த்துகளும், நன்றிகளும்.


கல்வியை நேசிக்கின்ற, 
மாணவர்களை நேசிக்கின்ற,
இந்த சமூகத்தை நேசிக்கின்ற
வாத்தியார்களின்
முதல் வரிசையில் நின்று பார்க்க வேண்டிய படம் வாத்தி.


திரைப்படத்தில் காண்பிப்பதைக் காட்டிலும் அதிகமாக இந்த சமுதாயத்திற்காக பாடுபடுகின்ற ஆசிரியர்களைக் கொண்டாடத் தவறுகின்ற, மறுக்கின்ற நிலை மட்டும் மாறிவிட்டால் கல்வியில் நாம் எங்கோ உயர்ந்துவிடுவோம். கார்ப்பரேட்டுக்களின் கைப்பிடிக்குள் சிக்காமல் கல்வியைக் காப்பாற்ற வேண்டிய நம் அனைவரின் கடமை என்பதையும் இந்தப் படம் உணர்த்துகின்றது.


'படிப்பை சொல்லித் தருவது யாராக  இருந்தாலும்
அவங்க கடவுளுக்கும் மேலே!' என்கிற காட்சிகளில் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம் ஆசிரியர்கள்.


'வாத்தியார் என்பது
வேலை இல்லை
அது ஒரு பொறுப்பு!' என்கிற பொறுப்பான எண்ணத்தை படம் பார்க்கின்ற அத்தனை பேருக்குள்ளும் ஏற்படுத்தும் இந்த வாத்தி


வாங்குற சம்பளத்தைவிட படிக்கிற மாணவர்களுக்கு மதிப்பு அதிகம். அந்த மதிப்பை உணர்ந்தால் மரியாதை தானாகவே கிடைத்து விடும் என்பதை உணர முடிந்தால் ஆசிரியர்கள் இன்னும் உயர்ந்த இடத்தில் அமர்ந்துகொள்ள முடியும்.


ஆயிரம் சாட்டைகளுக்கும் அதிகம் இந்த வாத்தி


ஓர் ஆசிரியரின் கோபம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்  என்பதற்கு இந்தப் படம் ஓர் எடுத்துக்காட்டு. சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்துடன் ஒப்பிட்டால், ஆயிரம் சாட்டைகளுக்கும் அதிகம் இந்த வாத்தி.


ஓர் ஆசிரியர் நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டால், அதனைத் தடுத்து நிறுத்தும் தகுதி இந்தத் தரணியில் எவருக்கும் கிடையாது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது இப்படம்.


தன் குழந்தைகளை நேசிக்கின்ற பெற்றோர்களும், கல்வியை நேசிக்கின்ற மாணவர்களும், இந்த சமுதாயத்தை நேசிக்கின்ற ஆசிரியர்களும் கொண்டாட வேண்டிய படம் வாத்தி.


நடிகர் தனுஷின் திரையுலக வரலாற்றில் இது Life Time Hit ஆக அமையும்..


தனக்குக் கிடைக்க வேண்டிய கௌரவத்தைக்கூட, மாணவர்களின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்யும்பொழுது ஓர் ஆசிரியராக எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றார் தனுஷ்..


நடிகர் தனுஷை முதன்முறையாக நல்ல மனிதராகப் பார்க்கத் தோன்றுகிறது.!’’


இவ்வாறு ஆசிரியர் சிகரம் சதிஷ் தெரிவித்துள்ளார்.