இந்தியில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடுபோட்ட திரைப்படம் டார்லிங்ஸ். ஆலியா பட் நடித்து வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல ரீச். ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த டார்லிங்ஸ் திரைப்படம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை பேசுகிறது.
இதுதான் கதை..
''எல்லாம் சரியாகிடும். அவரு கொஞ்ச நாள்ல திருந்திடுவார்'' - அடி, உதைபட்டு, ‘சமூக மரியாதைக்காக, கெளரவத்துக்காக!’ வாழ்க்கையை நகர்த்தும் பல லட்சக்கணக்கான பெண்களின் மனதில் எப்போதும் வந்துபோகும் சமாதானம் இதுதான். அல்லது, இதுதான் அவர்கள் தங்கள் காயங்களுக்கு, ’Placebo'-வாக தாங்களாகவே பயன்படுத்திக்கொள்ளும் பொய் ஆறுதல்.
ஆலியா, (பத்ருன்னிசா) ஹம்சா (குடிகாரக் கணவன்)- திருந்துவான் என அப்படித்தான் அடிவாங்கிக்கொண்டு காத்திருக்கிறாள். மறுபடியும், மறுபடியும் மன்னிக்கும் பத்ருன்னிசா, ஹம்சாவின் வெறியும், ஆண் திமிரும் தனக்குள் வளரும் குழந்தையை (மகளாக அவள் நினைத்த குழந்தை) கொன்றுபோடும் அந்த நாளில் தெளிவு பெறுகிறாள். எப்படியாவது இழந்த தனது மரியாதையையும், மதிப்பையும் தனது கணவன் ஹம்சாவிடம் பெற்றுவிட நினைக்கும் பத்ருன்னிசா, அவளின் அத்தனை ஆழ்மன ஆத்திரத்தின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்கிறாள்.
விரைவில் தமிழ், தெலுங்கு..
தற்போது இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் விரைவில் தமிழ், தெலுங்கில் உருவாக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து குறிப்பிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், டார்லிங்ஸ் திரைப்படத்தை பல மொழிகளிலும் தயாரிக்கவே விரும்பினோம். ஆனால் மொழிக்கு மொழி சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கதை அதேதான் என்றாலும் இடம்,மக்கள் வேறுபடுவார்கள். தற்போது டார்லிங்ஸ் மும்பையில் நடக்கும்கதை. இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். அனைத்தும் சரியாக அமைந்தால் விரைவில் படம் உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.