அதிவேகமாக 400 கோடி ரூபாயை வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளி பெற்றிருக்கிறது பதான் திரைப்படம்.
ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் படம் வெளியானது.
படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதையடுத்து, திரையிடப்படும் காட்சிகளும், தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதோடு வசூலில் பல சாதனைகளை படைத்துவருகிறது.
ராஜமௌலியின் ’பாகுபலி 2’ நானூறு கோடி ரூபாய் வசூலை15 நாள்களில் எட்டியிருந்த நிலையில், அந்த வசூலை 12 நாள்களில் எட்டியிருக்கிறது பதான் திரைப்படம். அதுவும் ஹிந்தி பதிப்பில் மட்டும் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றை சேர்த்தால் சுமார் 415 கோடியை தாண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே வேகத்தில் சென்றால் ’பாகுபலி 2’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பின் வசூலான 511 கோடியை இந்த வாரத்திலேயே பதான் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முறியடித்தால் பாலிவுட் சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக பதான் இருக்கும். ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ’சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் தான் அவருக்கு கடைசி ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்னும் நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதான் திரைப்படம் வெற்றியடைந்துள்ளது.
இந்தியில் மட்டும் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ள நிலையில் உலக அளவில் சுமார் 780 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது பதான் திரைப்படம். பாலிவுட்டில் ஹிட் அடித்த டாப் படங்களில் தென்னிந்திய திரைப்டங்களான பாகுபலி, பாகுபலி2, கேஜிஎஃப்2 ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
ஹிந்தி திரைப்பட இயக்குநர்களிடம் மக்களை ஈர்க்க வைக்கும் அளவிற்கு கண்டண்ட் இல்லை. பாலிவுட் தனது களத்தை தென்னிந்திய திரைத்துறையிடம் இழந்துவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையிலும், ’பாய்காட் பாலிவுட்’ எனும் பிரச்சாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் எழுந்த நிலையிலும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது பதான் திரைப்படம்.
மேலும் இப்படம் உலக அளவிலான வசூலில் விரைவில் 1000 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் நேற்று அமீர் கானின் டங்கல் பட சாதனையையும் பதான் முறியடித்தது. இந்தியில் டங்கல் படம் 387 கோடி வசூலித்த நிலையில் அதனை பதான் முறியடித்து 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இந்நிலையில், பாகுபலி 2 படத்தின் ஒட்டுமொத்த இந்தி வசூலான 511 கோடியை பதான் முறியடிக்க இன்னும் ஒரு வார காலம் தேவைப்படும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.