இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இருவரும் கடந்த 2020 ம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஷிகர் தவானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் பேசக்கூடாது என தவானின் முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னாள் மனைவி முகர்ஜிக்கு எதிராக ஷிகர் தவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வாழ்க்கையை அழித்துவிடுவேன் என மிரட்டுவதாகவும், ஐபிஎல் தொடரில் தான் முன்பு விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரான தீரஜ் மல்ஹோத்ராவுக்கு தன்னை பற்றி அவதூறான செய்திகளை கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் தனக்கும், தான் இதுவரை சேர்த்து வைத்திருந்த புகழுக்கும் களங்கம் ஏற்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரித் குமார், “ சமூக வலைத்தளங்கள், பத்திரிக்கைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட எந்தவொரு நபருக்கோ அல்லது இடத்திலோ தவானை இழிவான மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஒவ்வொரு நபரும் தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்று விரும்புவர். கடின உழைப்பால் கிடைத்த நன்மதிப்பும், பெயரும் ஒருமுறை போனால் அது மிகப்பெரிய இழப்பு” என்று தெரிவித்தார்.
தவான் - ஆயிஷா முகர்ஜி:
ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண். தவான் மற்றும் ஆயிஷா நீண்ட நாட்களாக டேட்டிங் செய்தபிறகு கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இது ஆயிஷாவுக்கு இரண்டாவது திருமணம் என்பதும், இவருக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் இருந்தனர். ஆயிஷா தவானை திருமணம் செய்த பிறகு, கடந்த 2014 ம் ஆண்டு ஜோராவர் என்ற மகன் பிறந்தார்.
இவர்களது குடும்ப வாழ்க்கை கடந்த 2020 ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு பிரிந்து வாழ்கின்றனர். ஜோராவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். அவ்வபோது தவான் தனது மகனை சந்தித்து வருகிறார். மேலும், தவான் இரு மகள்களை கவனித்தும் வருவதாக கூறப்படுகிறது.
ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவாரா தவான்..?
37 வயதான ஷிகர் தவான் கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணிக்காக கடைசியாக விளையாடினார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தவான் இடம்பெறுவது சந்தேகமாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர். கடைசியாக விளையாடிய வங்கதேச தொடரில் தவான் 7,8 மற்றும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.