பதான் பட வெற்றிக் களிப்புடன் ஷாருக்கான் - அட்லியின் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இப்படத்தில் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நயன்தாரா பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மூலம் மாஸான பாலிவுட் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்நிலையில் ask Srk ஹாஷ்டாக் மூலம் அடிக்கடி ட்விட்டரில் தன் ரசிகர்களுடன் உரையாடும் ஷாருக்கான், நேற்று முன் தினம் தன் ரசிகர்களுடன் ஜவான் படம் குறித்து பேசியுள்ளார்.

நயன் தாரா, விஜய் சேதுபதி இருவரையும் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஷாருக் சுவாரஸ்யமான பதில்களை அளித்து உற்சாகப்படுத்தினார்.

”நயன்தாரா மிகவும் இனிமையானவர், அனைத்து மொழிகளையும் சிறப்பாகப் பேசுவார். அவருடன் நடித்தது சிறப்பான அனுபவம். நீங்கள் அனைவரும் அவரை இந்தப் படத்தில் விரும்புவீர்கள் என நம்புகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய ஷாருக், ”அதி அற்புதம், மேலும் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானதும் கூட” என பதிலளித்துள்ளார்.

 

அனிருத் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”அனி புத்திசாலித்தனமானவர்…இவ்வளவு சிறு வயது நபருடன் பணியாற்றுவதில் ஆற்றல் மிகுந்ததாகவும், வேடிக்கையானதாகவும் உள்ளது, அவருடைய மொத்த இளைஞர் குழுவும் மிகவும் அருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், ஜவான் படக்குழுவினர் பற்றிய ஷாருக்கானின் இந்த பதில் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

முன்னதாக ஜவான் படத்துக்காக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்ற சண்டைக்காட்சி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன் 2ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.