பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் இரண்டு தீவிர ரசிகர்கள் அவரது மன்னத் பங்களாவின் சுவற்றில் ஏறி வீட்டுக்குள் குதிக்க முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷாருக்கின் டை-ஹார்ட் ரசிகர்கள்
20 - 22 வயதுடைய இந்த இளம் ஷாருக்கான் ரசிகர்கள், குஜராத்தில் இருந்து வந்ததாகவும், அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினர். பரபரப்பான சூழல் உருவான பின்னும் அசம்பாவிதம் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை. ஷாருக்கான் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி அவருடைய ரசிகர்கள் அவர்மீது அளவுகடந்த அன்பு வைத்து இது போன்ற சில செயல்களை செய்வதும் புதிதல்ல.
ரசிகர்கள் அவருடன் நெருங்கி பழக முயற்சிப்பது, அவரைப் பார்ப்பதற்காக பல விஷயங்களைச் செய்வது, அவரைத் தொந்தரவு போன்ற சம்பவங்களை ஷாருக்கான் அடிக்கடி சந்தித்து வருகிறார்.
நீச்சல் குளத்தில் ரசிகர்
இந்நிலையில் முன்னதாக ரசிகர் ஒருவர் தன் மன்னத் பங்களாவுக்குள் நுழைந்து தனது நீச்சல் குளத்தில் நீந்துவதைக் கண்டதை ஷாருக் ஏற்கெனவே பகிர்ந்திருந்தார். பாதுகாவலர்களால் அந்த ரசிகர் தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது தெய்வமான ஷாருக் தினமும் குளிக்கும் நீச்சல் குளத்தில் தான் நீந்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுபோன்ற பல ரசிகர்களின் தொல்லைகளை சந்தித்துள்ள ஷாருக் திரைப்படத் துறையில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராகவே இருந்து வருகிறார்.
பிறந்தநாளுக்கு கூடும் இடம்
மேலும், ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் மன்னத் பங்களாவிற்கு வெளியே கூடுகின்றனர். அவரது பிறந்தநாளை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதுவே இப்போது ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது.
அடுத்தடுத்த திரைப்படங்கள்
ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மன்னத்திற்கு வெளியே கூடுவார்கள், ஷாருக்கானும் வெளியே வந்து தனது ரசிகர்களை பார்த்து கை அசைப்பார். இந்நிலையில், ஷாருக்கின் மன்னத் பங்களாவிற்குள் அவரது ரசிகர்கள் இருவர் ஏறி குதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரும் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமான பதான் உலகம் முழுவதும் ரூ 1,000 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ள நிலையில், அடுத்ததாக ஜவான் மற்றும் டன்கி படங்களில் ஷாருக் கவனம் செலுத்தி வருகிறார்.