உலகமே கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் (Shah Rukh Khan) என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த சூப்பர் ஸ்டார் இன்று தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருக்கு என்னென்ன சர்ப்ரைஸ் காத்திருந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க...


 



நள்ளிரவு கொண்டாட்டம் :


ஆண்டுதோறும் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் கூட்டம் அவரின் வீட்டின் வாசல் முன்பு அலைகடல் போல திரண்டு இருக்கும். அதே போல நேற்று நள்ளிரவு அவரின் மும்பை வீட்டின்  வெளியே ரசிகர்கள் கூட்டம் அவரின் தரிசனத்திற்காக அலைமோதினர். ரசிகர்களை அன்புடன் தன் பால்கனியில் சந்திக்க வந்த ஷாருக்கான், தனது கைகளை கூப்பி நன்றி தெரிவித்து, பிளையிங் கிஸ்களை அள்ளி வீசினார். அவரைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அவை சோசியல் மீடியாவில் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் மிக வேகமாகப் பரவி வருகிறது.  ஏராளமான ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ஷாருக்கான் பிறந்தநாளை கொண்டாடினர். 


ரசிகர்களுக்கு நன்றி :


பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்களுக்கு எக்ஸ் தளம் மூலம்  “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற இரவே என் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் வெறும் நடிகன் மட்டுமே.


என்னால் முடிந்த அளவு எனது நடிப்பின் மூலம் உங்களை மகிழ்விக்க முடிகிறது என்பதை விட வேறு சந்தோஷம் ஏதுமில்லை. உங்கள் அன்பெனும் கனவில் நான் வாழ்கிறேன்“ என நெகிழ்ச்சியுடன் போஸ்ட் ஒன்றை பதிவு செய்து இருந்தார் ஷாருக்கான்.


 



பர்த்டே ட்ரீட் :


ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் மட்டும் ஜவான் என இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘டன்கி’ படத்தில் நடித்துள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டன்கி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல் மற்றும் பலர் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகர் ஷாருக்கான். 


மீண்டும் இணைந்த கூட்டணி :


ஷாருக்கான் - இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட்டணியில் உருவான 3 இடியட்ஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ், சஞ்சு, பிகே என ஏராளமான வெற்றிப்படங்களை தொடர்ந்து டன்கி படத்தில் இணைந்துள்ளனர். காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என பல விஷயங்களை ஒரே டீசருக்குள் அடக்கி ஷாருக்கான் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்துள்ளனர். அடுத்த 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்ய தயாராகி விட்டார் பாலிவுட் கிங் கான்.   


 



தோழியின் பிறந்தநாள் பரிசு :


நடிகர் ஷாருக்கான் தோழியும் சக நடிகையுமான ஜூஹி சாவ்லா சோசியல் மீடியா மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அற்புதமான பரிசையும் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு பிறந்தநாள் நாள் பரிசாக 500 மரக்கன்றுகளை நடுவதாக உறுதி அளித்துள்ளார். 


ஓடிடியில் ஜவான் :


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் 1100 கோடி வசூலை ஈட்டி மாபெரும் வெற்றி பெற்றது. ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.