தொடர் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த இயக்குநர்களில் அட்லீயும் ஒருவர். தமிழில் முன்னணி இயக்குநராகவும் உள்ளார். ராஜா ராணியில் தொடங்கிய அட்லீயின் வெற்றி பிகில் வரை தொடர்ந்தது. இந்நிலையில் அடுத்து அட்லி இணையப்போவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எனத் தகவல் வெளியானது. பின்னாட்களில் அது உறுதி செய்யப்பட்டது. ஆக்‌ஷன் - த்ரில்லர் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அட்லீயின் வழக்கமான கமெர்சியல் சாயமும் படத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ் அப்டேட் சில கசிந்துள்ளன.


ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஸ்பெஷல் டீசருடன் வெளியாகும் என கூறப்படுகிறது. அதிக பட்ஜெட், பெரிய நடிகர் என்பதால் சற்று பெரிய அளவிலேயே தொடக்கம் இருக்குமென கூறப்படுகிறது.




எனினும், கதாநாயகி கதாப்பாத்திரம் குறித்து எந்த தகவல்களையும் படக்குழு தெரிவிக்கவில்லை. ஆனால், இத்திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்காக தயாரிப்பாளர்கள் தரப்பு அவரிடம் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இத்தகவல் ஏதும் உறுதி செய்யப்படாதா ஒன்றாகவே உள்ளது. நயன்தாரா நடிப்பது உறுதியானால், அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானால், நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை இந்தாண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்தாண்டின் தொடக்கத்திலோ வெளியிட படத்தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.




இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஷாருக்கான் - நயன் தாராவைக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாகவும், படத்தின் தலைப்பும் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில்  தான் ஸ்பெஷல் டீசருடன் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்க இருப்பதாகவும் கோலிவுட் பக்கம் தகவல் கசிந்துள்ளது.


இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலியைத் தொடர்ந்து பெரிய அளவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ட்ராமா திரைப்படமான பதானை இயக்குநர் சித்தார்த் ஆனந்த இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் அட்லீ உடனான அடுத்த படத்தை ஷாருக்கான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது