கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் உள்பட 4 பேர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



 


எலவனாசூர் கோட்டை கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை கடத்தி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் அய்யப்பன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபால் இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருளான கஞ்சா பயிர் சாகுபடி செய்து சமுதாய சீர்கேட்டை விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் அய்யாகண்ணு (55) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.


மேலும் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பள்ளிச்சந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அய்யர் என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து  150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்திருந்தனர்.




 


திருநாவலூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி வெண்ணிலா என்பவரை கொலை செய்த அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதையடுத்து மேற்கண்ட 4 பேரின் குற்ற செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரில் அய்யப்பன், அய்யாகண்ணு , அய்யர், அறுமுகம் 4 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tirupati: ‛என்னுடன் உறவு வைத்தால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்’ திருமலையில் தில்லுமுல்லு சாமியார் கைது!