ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் இயக்குனர்கள் ஹரிஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் பாராட்டை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்திருந்தார் நடிகை சமந்தா.
புராண கதையில் சமந்தா :
இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா ஒரு புராண கதையில் நடித்துள்ளார். மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்ட 'சகுந்தலம்' திரைப்படத்தில் கதையின் நாயகியான சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் குணசேகரன்.அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொடரும் யசோதாவின் வெற்றி :
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சகுந்தலம்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராமகிருஷ்ணா நிறுவனம் கைப்பற்றியது :
யசோதா திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தை வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் உரிமையை கைப்பற்றியிருந்தது ராதாகிருஷ்ணா நிறுவனம். அப்படத்திற்கு வெளிநாடுகளில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து நடிகை சமந்தாவின் புராண கதையான 'சகுந்தலம்' திரைப்படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளிநாடுகளில் விநியோகம் செய்யும் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றியுள்ளது ராமகிருஷ்ணா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.
தென்னிந்திய சினிமாவில் வரலாற்று கதைகள், புராண கதைகள், நாவல்களை தழுவி அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ரசிகர்கள் மத்தியிலும் இது போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவிலும் இது போன்ற இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சினிமாவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.