பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த சிஷ்யன் பாலா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'சேது'. யாருமே பேச தயங்கும் விஷயங்களை கூட அருகில் சென்று அவர்களின் மறுபக்கத்தை துணிச்சலாக காட்டக்கூடிய கலைஞன். தன் அழுத்தமான எழுத்தின் மூலம் மெனக்கெட்டு நம்மை உலுக்கும் அளவிற்கு திரையில் காட்சி படுத்த கூடிய சாமானியன். அது தான் அன்றும் இன்றும் என்றுமே பாலாவின் ஸ்டைல் என கருதப்படுகிறது. 


 




மேஸ்ட்ரோவின் இசை செய்த மேஜிக்:


ஏர்வாடிக்கு சென்ற போது அங்கு அவர் கண்ட காட்சியால் அதிர்ந்து போன பாலாவின் தாக்கம் தான் சேது. இப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை கடந்து விட்டாலும் இன்றும் நினைக்கும் போது நமது மனங்களை கனக்க செய்கிறது. அங்கு இருந்த மனநிலை பாதித்த மக்களின் வாழ்வியலை திரைக்கதையாக கோர்த்து அர்ப்பணித்தவர். சேது திரைப்படத்துக்கு மற்றுமொரு பெரும் பலமாய் விலாசமாய் அமைந்தது இசைஞானி இளையராஜாவின் இசை. மனதை உருக்கும் இசையோடு சேர்த்து அவரின் தளும்பும் குரலில் ஒலித்த எங்கே செல்லும் இந்த பாதை... பாடல் மூலம் கேட்போரையும் சோகத்தில் மூழ்கடித்தவர். இப்படம் நிச்சயமாக தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. 


 







சீயான் விக்ரமுக்கு கிடைத்த மறுபிறவி :


சேது திரைப்படம் மூலம் முகவரி பெற்ற மற்றுமொரு கலைஞன் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த விக்ரம் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தவர். ஒரே ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் தவம் இருந்த ஒரு அற்புதமான நடிகனின் பசிக்கு தீனியாய் அமைந்த திரைப்படம் சேது. ஒரு நடிகனால் இந்த அளவிற்கு இறங்கி தன்னை நிரூபிக்க முடியுமா என திகைக்க வைத்தவர். 9 ஆண்டுகாலமாக காத்து இருந்த விக்ரம், சேது திரைப்படத்திற்காக 13 கிலோ வரை உடல் எடையை குறைத்தார். அவரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், உழைப்பும் வீணாகாமல் விஸ்வரூபம் எடுத்து சீயான் விக்ரம் என இன்றும் ஒரு மாஸ் ஹீரோவாக கெத்து காட்டிவருகிறார். 


 






 


பட்ட துயரம் கொஞ்சமல்ல :


இன்று பல திரைப்படங்கள் சேது படத்தை மையமாக வைத்து வெளியானாலும் அதற்கு எல்லாம் ஒரு முன்னோடியாக விளங்கியது பாலாவின் சேது தான். இப்படத்தை நாம் இன்று இந்த அளவிற்கு பாராட்டுகிறோம் ஆனால் அப்படம் வெளியான போது சந்தித்த சிக்கல்கள் ஏராளம். நூறு முறைக்கும் மேல் திரையிடப்பட்டு யாருமே படத்தை வாங்க முன்வரவில்லை என்பது தான் சங்கடம். அதை விட பெரிய துயரம் திரையரங்கில் வெளியாகி ஒரு வாரம் வரை ஆடியன்ஸ் கூட்டமே இல்லை.


பிரபல பத்திரிகை ஒன்று சேது படத்தை கொண்டாடி தள்ளியது. அதற்கு பிறகு மெல்ல மெல்ல ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்து ஒரு காலகட்டத்தில் திரையரங்கமே அதிரும் அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்படி 300 நாட்கள் வெற்றிகரமாக ஓடி தேசிய விருதையும் கைப்பற்றியது சேது திரைப்படம். இது வரையில் எத்தனை காதல் படங்கள் வந்து இருந்தாலும் இனிமேலும் பல கோணங்களில் காதல் திரைப்படங்கள் வெளிவந்தாலும் என்றுமே தவிர்க்க முடியாத மறக்க முடியாத ஒரு காதல் படம் 'சேது'. தோல்வி என்பது யாருக்குமே நிலையல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்த திரைப்படம்.