2020ஆம் ஆண்டு சந்தானத்தின் நெருங்கிய நண்பர் சேதுராமன் உயிரிழந்த நிலையில், அதே நாளில் 4 ஆண்டுகள் கழித்து அவரது மற்றொரு நண்பரான சேஷூவும் உயிரிழந்துள்ளார்.


நகைச்சுவை நடிகர் சேஷூ


விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'லொள்ளு சபா’ நிகழ்ச்சியில்  பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் சேஷூ (Seshu).  இதனாலே இவரை ‘லொள்ளு சபா சேஷூ’ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் முதலில் ரசிகர்களைப் பெற்ற சேஷூ கடந்த 2002ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.


தனுஷ் நடித்து 2002ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமைப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் சேஷூ. தொடர்ந்து வீராப்பு,  வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, குலு குலு, ஏ 1, பாரிஸ் ஜெயராஜ், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 



“குடும்பத்தில் இப்போது ஒருவர் இல்லை”


சந்தானத்தின் பெரும்பாலான காமெடி படங்கள் வெற்றிபெறுவதற்கு, சேஷூ போன்ற துணை காமெடி நடிகர்களும் முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சேஷூ. அவரது மருத்துவ சிகிச்சைக்காக உதவிகேட்டு நகைச்சுவை நடிகர் அமுதவாணன் வீடியோ வெளியிட்டிருந்தார். சேஷூ குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்ப இருப்பதாகவும் அவரது மகன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சேஷூ நேற்று மாலை உயிரிழந்தார். அவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், சேஷூ அவர்களின் நீண்ட கால நண்பர்களான சாமிநாதன், மனோகர், மாறன், ஜீவா மற்றும் நடிகர் சந்தானம் என அனைவரும் சேஷூவின் வீட்டுக்குச் சென்று தங்களது இரங்கலைத் தெரிவித்துவிட்டு வந்தார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சந்தானம், “நாங்கள் எல்லாரும் டிடி ரிடர்ன்ஸ் படத்தின் விவாதத்திற்காக சென்றிருந்தோம். அப்போது தான் எங்களுக்கு சேஷூ அண்ணன் இறந்துவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.


மருத்துவர் சேதுராமன் இறந்த அதே நாள்


சமீபத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின்போது கூட நிறைய படங்களை நடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லை ஒரு நல்ல மனிதர் சேஷூ அண்ணன். எங்கள் லொள்ளு சபா குடும்பத்தில் ஒருவர் சேஷூ அண்ணன். அவரது இறப்பு ஏற்றுகொள்ள முடியாததாக இருக்கிறது. இது எங்கள் லொள்ளு சபா குடும்பத்திற்கு மிகப்பெரிய் இழப்பு. எங்கள் அனைவரது சார்பாகவும் அவரது குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.


இதே மார்ச் 26ஆம் தேதி சந்தானம் தனது நெருங்கிய நண்பரான நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமனை (Sethurman) கடந்த 2020ஆம் ஆண்டு சந்தானம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் நடித்து “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்த மருத்துவர் சேதுராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.