MDMK: மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


”மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”


தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. விசாரணையின் போது, மதிமுகவிற்கு போதிய வாக்குசதவிகிதம் இல்லை, அதோடு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடர்பாக பரிசீலித்து புதன்கிழமை காலை 9 மணிக்குள் தெரிவியுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என, அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலில் நடைபெற உள்ளது. 


வழக்கு விசாரணை:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு, திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால், மதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையெதிர்த்து அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது, ”தங்களது கட்சிக்கு 5.97 சதவிகிதம் அதாவது சுமார் 6 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. எனவே கட்சியின் பம்பர சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என வைகோ சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும், அதோடு அக்கட்சிக்கு 5.4 சதவிகித வாக்கு வங்கி மட்டுமே உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, இன்று காலை 9 மணிக்குள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.


துரைவைகோ சின்னம் என்ன?


கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் மதிமுக வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக முதலில் வலியுறுத்தியது. ஆனால், அதனை மதிமுக தலைமை முழுமையாக நிராகரித்தது. அதனை தொடர்ந்தே, திருச்சி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைதொடர்ந்து, உயிரே போனாலும் இனி எங்கள் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம். இல்லையென்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். ஆனால் உதயசூரியன் சின்னதில் போட்டியிடமாட்டோம்” என துரை வைகோ கூறியிருந்தார். இந்நிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, துரைவைகோ எந்த சின்னத்தை கொண்டு, திருச்சி தொகுதியில் களம் காண உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.