சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதோடு ரசிகர்களிடையேயும் பேசு பொருளாகியுள்ளது. 


பொதுவாக திரையுலக பிரபலங்கள் காதலில் விழுவதும், பிரிவதும், திருமணம் செய்வதும், விவாகரத்து வாங்குவதும் சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகள். அத்தகைய சம்பவங்களுக்கு பிறகு இருவரும் பொதுவெளியில் சந்தித்தால் எப்படி நடக்கிறார்கள் என்பது பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். 


இதற்கிடையில் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் போட்டோஷூட் என்ற கலாச்சாரம் என்பது ட்ரெண்டாகி வருகிறது. பிறப்பு தொடங்கி இறப்பு வரை பல நிகழ்வுகளும் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார். 


ஜி தமிழில் ஒளிப்பரப்பான 'முள்ளும் மலரும்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி.  இவர் சூப்பர் மாம் போன்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர் ரியாஸ் என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதியினருக்கு ரியா என்ற மகள் உள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷாலினி, கணவர் ரியாஸ் தன்னை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஷாலினிக்கு விவாகரத்து வழங்கியது. இதனை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவர், போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் திருமண புகைப்படங்களை கிழித்தும், காலால் மிதித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் தனது பதிவில், “இது குரலற்றவர்கள் என தங்களை உணர்பவர்களுக்கு நான் தரும் விவாகரத்து செய்தியாகும். ஒரு மோசமான கல்யாணத்தை விட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்.


உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, உங்களுக்கும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் தேவையான மாற்றங்களைச் செய்யத் தயாராகுங்கள். விவாகரத்து தோல்வி அல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனை. ஒரு திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. என்னைப் போன்ற துணிச்சலான அனைத்து பெண்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் 5 நாட்களுக்கு முன்பே பதிவிடப்பட்டிருந்தாலும் இப்போது தான் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இப்படி கொண்டாடியது சரியென்றும், தவறு என்றும் சோஷியல் மீடியாவின் இரு தரப்புகள் அடித்துக்கொள்கின்றன