சின்னத்திரையில் நடிக்கும் பெரும்பாலானவர்களை அவர்கள் நடித்த கதாபாத்திரங்களாகவே அடையாளம் காண்கிறார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் இன்று வரை மக்கள் மனதில் பூங்காவனமாகவே அடையாளம் காணப்படுபவர் நடிகர் ஜெயமணி. 'திருமதி செல்வம்' தொடரில் ஹீரோ செல்வம் தந்தையாக பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் ஜெயமணி.


 



 


சமீபத்தில் தனியார் ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும் நடிப்பு அனுபவம் குறித்தும் பகிர்ந்து இருந்தார்.  நடிகர் ஜெயமணி பேசுகையில் "பூங்காவனம் கேரக்டர் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று கொடுத்தாலும் அந்த அடையாளம் மட்டும் மாறவே இல்லை. அதற்கு பிறகு நான் எத்தனையோ சீரியல்களில் நடித்துவிட்டேன், ஆனாலும் அதை மாற்ற முடியவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கிறேன். இப்போது என்னை எல்லோரும் மலேசியா மாமாவாக தான் பார்க்கிறார்கள். நான் நினைத்தது தற்போது தான் நடந்துள்ளது. 


திருமதி செல்வம் சீரியலில் நடிக்க டெலிவிஸ்டாஸ் ராதா மேடம் தான் என்னை சிபாரிசு செய்தார். நான் அவருடைய சாய்ஸ் இல்லை என வெளிப்படையாக முன்னரே இயக்குநர் சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 40 சீரியல்களை இயக்கி இருக்கிறேன். அதனால் அவரின் எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்கு புரிந்தது. என்னுடைய முழு முயற்சியையும் நான் போட்டேன். மக்கள் மத்தியில் பதியும் அளவுக்கு என்னுடைய முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்தேன். 


 



7 வயதில் இருந்தே எனக்கு சினிமா கனவு இருந்தது. என்னுடைய மாமா பாடகர் என்பதால் அவரின் மூலம் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றேன். காலேஜ் படிப்பை முடித்ததும் சென்னை வந்தேன். என்னுடைய குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் சென்றேன். இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. தெரிந்தவர் மூலம் மீண்டும் நாடகத்தில் சேர்ந்தேன். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பும் வந்தது. நிரந்தரமா எந்த வேலையும் இல்லை. சினிமா தான் என்னை ஒரு இடத்துல உட்கார வைச்சுது. நான் இன்னும் நினைத்ததை சாதிக்கல. எனக்கு தெரிஞ்சுது சினிமா துறை தான். அதனால் அதை நான் இறுக பற்றிக் கொண்டேன். 


சீரியலில் நடிப்பவர்களை திரைப்படங்களுக்கு தேர்ந்தெடுக்கஜ் கூடாது என்ற தப்பான ஒரு எண்ணம் இருக்கிறது. அது மாற வேண்டும். நமக்கு வரவேண்டிய வாய்ப்பு நிச்சயம் நமக்கு வரும். சினிமாவை காட்டிலும் சீரியல் தான் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைச்சு இருக்கேன். விரைவில் அது திரையில் வரும்" என நம்பிக்கையுடன் பேசி இருந்தார் பூங்காவனத்தில் இருந்து மலேசியா மாமாவாக மாறி கலக்கி வரும் நடிகர் ஜெயமணி.