’நானே வருவேன்’ பட டீசரில் இயக்குநர் செல்வராகவன் கதாபாத்திரத்தின் தோற்றம் நடிகர் தனுஷைத் தாண்டி கவனமீர்த்துள்ளது.
தமிழ் சினிமா தாண்டி நடிப்பு அசுரனாகக் கொண்டாடப்படும் நடிகர் தனுஷ் தனது அண்ணனும் குருவுமான இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ள படம் ’நானே வருவேன்’
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் வரிசையில் ஐந்தாம் முறையாக இவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ள நிலையில். ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புடன் படத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், தனுஷை தாண்டி இந்த டீசரில் செல்வராகவனின் லுக் கவனம் ஈர்த்து ரசிகர்களிடையே பேசுபொருள் ஆகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் டீசரில் வரும் நிலையில், வேட்டைக்காரன் போன்றும், நீண்ட கூந்தலோடும், கையில் வில் அம்புடனும் டீசரில் இரண்டு காட்சிகளில் செல்வராகவன் தோன்றுகிறார்.
இயக்கம் தாண்டி செல்வராகவனின் இந்த பாத்திரமும் கெட் அப்பும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
செல்வராகவன் இயக்கத்தைத் தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், முன்னதாக அவர் நடிப்பில் உருவாகி வரும் பகாசுரன் பட லுக்கும் இதேபோல் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.