தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது. இதனால் 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பாசனத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக குறுவை சாகுபடி பணிகள் நடந்துள்ளது. இந்தாண்டு இலக்கை மிஞ்சி குறுவை பயிரிடப்பட்டுள்ளது. இதில் பல பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தற்போது குறுவை பயிர்கள் நன்கு வளர்ந்து இரண்டு வாரங்களில் அறுவடை செய்யும் அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் காவிரி ஆற்றிலிருந்து மாயனூர் கதவணையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர் திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரிக்கு வந்ததும், அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பிஏரி, வெண்டியம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த ஏரிகளில் உள்ள தண்ணீரை நம்பியே இப்பகுதி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 





இந்த ஏரிகள் ஒன்று நிரம்பிய பி்ன் அடுத்த ஏரி நிரம்புவது வழக்கம். இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி சைபன் வழியாக வெண்ணாறுக்கு செல்கிறது.

இதனால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகளுக்கு சங்கிலித் தொடர் போன்று ஒவ்வொரு ஏரியாக நிரம்புவது வழக்கம். தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உடைந்ததால், தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது. இந்த தண்ணீர் வெண்ணாற்றில் கலக்கிறது.

தற்போது தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் அடைத்தாலும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாது. எனவே தடுப்பணையை சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தற்காலிகமாக தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டாலும் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படும் நிலையே உள்ளது. எனவே நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.