ஆயிரத்தில் ஒருவனை அப்போதே கொண்டாடி இருந்தால் இப்போது, தான் அதன் நான்கு பாகங்களை எடுத்து முடித்திருப்பேன் என இயக்குநர் செல்வராகவன் பேசியிருக்கிறார்.


துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


 






கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்த நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்து படம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்கள் முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் இராண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். எப்போதும் தனது படங்களுக்கு எப்போது பிரோமோஷனை பிரமாண்டமாக செய்யும் கலைப்புலி தாணு இந்தப்படத்திற்கு அந்த அளவிற்கு பெரிதாக பிரோமோஷன் செய்யவில்லை.


படம் சார்பாக தான் மட்டுமே தோன்றி நேர்காணல்களில் பேசி வந்தார்.  இந்த நிலையில் வெளியானதையடுத்து  படம் தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் கடந்த சில நாட்களாக நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அப்படி கொடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி அவர் பேசியிருக்கிறார்.


செல்வராகவன் பேட்டி: 


இது குறித்து பேசிய செல்வராகவன், “ அது ஒரு அனுபவம். இப்போது ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடுவது போல, அப்போது கொண்டாடி இருந்தால் இந்த நேரம் பார்ட் 3, 4 கூட முடிந்திருக்கும்.  நம்முடைய படைப்பு நினைத்த அளவுக்கு கொண்டாடப்படவில்லை என நினைக்கும் போது நமக்கே ஒரு சோர்வு வரும். அப்போது இன்னும் நாம் நம்முடைய வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தோன்றும்.


உண்மையில் அந்தப்படம் பெரிய அளவுக்கு வெற்றியை பெற்றிருந்தால் இந்த நேரம் 4 பார்ட்டுகள் கூட வந்திருக்கும். அந்தப்படத்தில் ஜிவியின் உழைப்பு மிகப்பெரியது. அந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரின் உழைப்பு அசாதாரணமானது. அவர் ஒரு இசை அரக்கன். வேலை சரியாக வரும் வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பார்.” என்று பேசியிருக்கிறார்.