நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  அறிவித்திருந்தார். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த அறிவிப்பை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடை இல்லை என்றதும், கூடுதல் விலைக்கு சந்து கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபான விற்பனை களை கட்டியது. குறிப்பாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதூரில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான தாபா ஒன்றில் மதுபான விற்பனையும், மது பிரியார்களுக்கான சைடிஸ்கள் விற்பனையும் அனல் பறக்க நடந்து கொண்டிருந்தது. மேலும் மது பிரியர்களின் வசதிக்கும், சவுகரித்துக்கும் ஏற்ப சற்றும் சளைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்த கூலிங் பீருடன், மட்டன் சிக்கன் உள்ளிட்டவற்றோடு ஒவ்வொரு அறைகளுக்கும் தாராளமாக பரிமாறப்பட்டு வந்தது.

 

மேலும் அரசு மதுபான கடைகளில் கிடைக்கும் மதுபான வகைகளை விட இவர்களிடம் அனைத்து வகையான மது வகைகளும் கூடதல் விலையில் கிடைக்கின்றது. இன்று மட்டுமல்ல மற்ற நாட்களிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தாராளமாக நடைபெறும் மது விற்பனையால், பல மது பிரியர்கள் டாஸ்மார்க் கடையை திரும்பி கூட பார்ப்பதில்லையாம். மேலும் இந்த தாபாவின் எதிரில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் அளவுக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வரும் நபர்களால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மதுபான விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டும் அந்த அறிவிப்பை எல்லாம் காற்றில் பறக்க விட்டு சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். 

 

இந்த சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தொப்பூர் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். காந்தி ஜெயந்தி தினத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டிய காவல் துறையினர் மெத்தன போக்குடன்  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை சிறிதளவும் மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சட்ட விரோத விற்பனையை தடுக்க வேண்டிய காவல் துறை, இதற்கு ஆதரவு கொடுத்து வருவதால், கள்ள மதுபானம் முதல் சட்ட விரோத செயல்கள் வரை அனைத்தும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தான் கூடும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.