மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்துள்ளது.
படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் - சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். ஒரு பக்கம் இந்தப் பாடலின் வரிகளை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர் . ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பட பிரபலங்களும் இந்தப் பாடலை பாராட்டி வருகிறார்கள். தற்போது இந்நிலையில், இந்தப் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
மயக்கும் பாடல்
தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழிலே இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று . ஐயா ஏ.ஆர்.ரஹ்மான் தலைவா. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள்.” என்று ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதி ஆகிய இருவரையும் பாராட்டியுள்ளார் செல்வராகவன்.
அலைகடல் ரசிகன்
முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது அந்தப் படத்தில் இடம்பெற்ற அலைகடல் பாடலையும் இதே போல் செல்வராகவன் சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
”என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பாடலைக் கொண்டாடுவேன்” என அலைகடல் பாடலைக் குறிப்பிட்டு செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் வழக்கமாகப் பணியாற்றி வந்துள்ள செல்வராகவன் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களை இவ்வாறு புகழ்ந்து பதிவிட்டு வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அனேகமாக தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு ரஹ்மானை இசையமைக்க வைக்கும் திட்டம் செல்வராகவனிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ராசாக் கண்ணு, நெஞ்சமே நெஞ்சமே, கொடி பறக்குற காலம், உச்சந்தல, வீரனே, மன்னா மாமன்னா மற்றும் ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ராசா கண்ணுப் பாடலை வடிவேலு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.