நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கவிருக்கிறார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த லேட்டஸ்ட் அப்டேட்டால் விஜய் ரசிகர்களும் செல்வராகவன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்யின் 65 வது திரைப்படம் இது.  இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது.


இப்படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். விஜய்யின் இந்தப் படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் பூஜா ஹெக்டே திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் தான் படத்தில் செல்வராகவன் இணையவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் எனத் தெரிகிறது.


மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இயக்குநர் செல்வராகவன் விஜய்க்கு வில்லனாகக் களமிறக்கப்பட்டுள்ளார். படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் அப்டேட் வெளிவர வெளிவர படத்துக்கான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே செல்கிறது.


ஆகச் சிறந்த நடிகர்!


இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


இது, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சாணிக்காயிதன் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எல்லா இயக்குநர்களும் சிறந்த நடிகர்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், செல்வராகவன் சார் ஆகச் சிறந்த நடிகர்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


அறிமுகப் பட இயக்குநரிடம் சபாஷ் வாங்கியுள்ள நடிகர் செல்வராகவன் அடுத்தடுத்த படங்களிலும் கலக்குவார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை கசியும் தகவல்களின்படி செல்வராகவன் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாகத் தோன்றினால் அது நிச்சயமாக அவரது தொழிலில் திருப்புமுனையாகவே இருக்கும். ஒரு காலத்தில் ரகுவரன் குணச்சித்திர நடிகராக இருந்து வில்லனாகக் கலக்கினார். அதுபோன்றதொரு கலக்கல் படலத்தை செல்வராகவனும் நடத்தலாம்.