செல்வராகவன் இயக்கிய என். ஜி. கே திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இயக்குநர் செல்வராகவன் 2013 இல் இயகிய இரண்டாம் உலகம் படத்திற்குப்பின் கிட்டதட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின் எழுதி இயக்கியப் படம் என்.ஜி.கே. இந்த ஆறு ஆண்டுகளில் செல்வராகவனையும் அவரது படங்களையும் கொண்டாடி தீர்த்திருந்தார்கள்.


என்.ஜி.கே.


இந்த ஆறு ஆண்டுகளில் தான் செல்வராகவனுக்கு புதிய ரசிகர் கூட்டமும் சேர்ந்தது. அடுத்த படத்தை எப்போது எடுப்பார்? என காத்திருந்த சமயத்தில் தான் சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கும் தகவலை வெளியிட்டார் செல்வராகவன். முற்றிலும் அரசியலை மையப்படுத்திய கதைக்களமாக எடுக்கப்பட்ட என்.ஜி.கே எதிர்பார்த்த அளவிற்கு திருப்திகரமான ஒரு படமாக அமையவில்லை. சிலர் அந்தப் படம் பிடித்திருந்தது என்றார்கள், சிலர் பிடிக்கவில்லை என்றார்கள், சிலருக்கு புரியவே இல்லை என்றார்கள். இன்றுவரைகூட இந்தப் படத்தைக் குறித்தான குழப்பமான மனநிலை தான் எஞ்சுகிறது.


அரசியல் களத்தை மையமாகக் கொண்டு ஒரு படமெடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்துள்ளது என செல்வராகவன் தெரிவித்திருந்தார். முன்னதாக செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில்  அரசியல் குறித்தான அவரது பார்வையை ஓரளவிற்கு நாம் அவதானிக்க முடியும். என்.ஜி.கே படமும் கிட்டதட்ட புதுபேட்டையின் அரசியல் களத்தில் இயங்கும் கதையாகவேதான் அமைந்தது. படம் வெளியான போது ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இணையதளத்தில் விவாதித்தார்கள். செல்வராகவன் தன் சார்பில் படத்தின் நிறைய சீக்ரெட்ஸ் ஒளித்து வைத்திருப்பதாக கூறியிருந்தார்.


செல்வராகவனின் ரசிகர்:


செல்வராகவனின் முந்தையப் படங்களுக்கும் இந்த படத்திற்கும் இருந்த மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் பழைய செல்வராகவன் ரசிகர்களின் ஆதரவை பற்றியோ தன் படங்களின் வெற்றித் தோல்விகளை பற்றியோ முதன்மையாக கருதாமல் தன் மனதிற்கு சரி என்று தோன்றிய கதையை எடுத்துவந்தார். ஆனால் என்.ஜி.கே படத்தில் செல்வராகவன் தன் படத்திற்கு நியாயம் சேர்க்க முழுவதுமாக ரசிகர்களின் ஆதரவை சார்ந்தே இருந்தார்.


இத்தனை ஆண்டுகள் இயக்குநராக இருந்து பெரிதும் அங்கீகரிக்கப்படாத செல்வராகவன் புதுப்பேட்டை ரீ ரிலீஸுக்குப்பின் ரசிகர்க்ளால் கொண்டாடப்பட்டார் . அவர் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஒரு செல்வராகவன் ரசிகன் அறிவார் அவரது படங்களை எந்த வயதில் பார்த்தாலும் சரி எவ்வளவு புரியாமல் போனாலும் சரி அவரது படத்தைப் பார்த்து  முடித்து வெளியே வரும்போது ஏதோ ஒருவகையான இறுக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அந்த இறுக்கத்தை என்.ஜி.கே படம் கொடுத்தாக தெரியவில்லை. கடைசிவரை அந்த சீக்ரெட்ஸ் ஒரு செல்வராகவன் ரசிகனுக்கு தேவையே படவில்லை.