நடிகர் ரஜினிகாந்தின் தன்னலமற்ற மனிதநேயம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் இஷான் மசூம்தர் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் 4 தசாப்தங்களாக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அவரின் ஸ்டைல், நடிப்பு என அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் அவரின் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல துறைகளில் தன் திறமையை காட்டிய ரஜினி 70 வயதிலும் இன்னும் இளமைக்கான சுறுசுறுப்புடன் நடித்து வருகிறார். 


அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ”ஜெயிலர்” படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ஜாக்கி ஜெஃராப், யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படம் ஜூன் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும், தொடர்ந்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படி தன்னை பிஸியாக வைத்துக் கொள்ளும் ரஜினி அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்க்கை பற்றிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். 


இதனிடையே ரஜினி பற்றி பிரபல பாலிவுட் நடிகர் இஷான் மசூம்தர் புகழ்ந்து தள்ளியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள அவர், ”இந்தக் கதையை நான் சில வருடங்களுக்கு முன் எங்கேயோ படித்தேன். 2015 ஆம் ஆண்டு சென்னை பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தபோது ​​​​ரஜினிகாந்த் பொதுமக்களின் மரணம் மற்றும் அழிவால் மிகவும் வேதனையடைந்தார்.


உடனே அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுமாறும் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அவரது இயல்பில் உள்ள தன்னலமற்ற தன்மை அவரை எப்போதும் இந்திய சினிமாவில் நாம் பார்த்த மனிதநேயமிக்க சூப்பர் ஸ்டாராக ஆகியுள்ளது. ரஜினிகாந்தின் அந்த பணிவு ஒருவரின் அந்தஸ்து மற்றும் புகழை ஒருபோதும் பாதிக்காத விதம், அனைவருக்கும் ஒரு பாடமாக உள்ளது.


அவருக்குப் பின் பல ஆண்டுகளாக பல நட்சத்திரங்கள் சினிமாவில் அறிமுகமானாலும் அவரது இயல்பு எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறது. ரஜினிகாந்தின் வாழ்க்கையிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் ஊக்கமளிக்கும் பாடம் என்னவென்றால்,  வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் போது அவர் ஒருபோதும் உடைந்து விடமாட்டார், அதனால் தான் அவர் வலிமையின் உருவமாக இருக்கிறார்” என்றும் இஷான் மசூம்தர்  தெரிவித்துள்ளார்.