இன்ஸ்டாகிராமில் இதுவரை எந்த பெண்ணிற்கும் கிடைத்திராத அங்கீகாரம் பாப் பாடகி செலினா கோம்ஸிற்கு கிடைத்துள்ளது. அதன்படி, இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
செலினா கோம்ஸ்:
அமெரிக்காவை சேர்ந்த 30 வயதான செலினா கோம்ஸ் உலகளவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் பாப் பாடகியாக உள்ளார். அவரது ரம்மியமான குரலை கேட்டு மயங்காத ஆட்களே கம்மிதான். அவர் நடத்தும் இசைநிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டமே அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இதோடு, நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் என பன்முகம் கொண்டுள்ளார். தனது பிசியான நேரத்திற்கு மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் அவர் தீவிரமாக களமாடி வருகிறார். இந்நிலையில் தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு எந்த பெண்ணுக்கும் இதுவரை கிடைத்திராத அங்கீகாரம் செலினா கோம்ஸிற்கு கிடைத்துள்ளது.
400 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற செலினா:
அமெரிக்காவில் பிரபல நடிகையும், தொழிலதிபருமான கைலி ஜென்னர் 382 மில்லியன் ஃபாலோவர்கள் உடன், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட பெண்ணாக இருந்தார். அந்த சாதனையை சில வாரங்களுக்கு முன்பு செலினா கைப்பற்றினார். இந்நிலையில், கடந்த 18ம் தேதியன்று 400 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் பெண் என்ற அந்தஸ்தை தனதாக்கினார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் செலினா வெளியிட்டுள்ள பதிவில், ”400 மில்லியன் ஃபாலோவர்களையும் தான் அணைக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு ரசிகர்கள் உடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் கமெண்ட்:
அந்த பதிவை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள், ”the queen of Instagram, 'Once a queen always a queen, blessed to be a part of the 400 million, 500 Million we are coming'' என பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதிக ஃபாலோவர்களை கொண்ட நபர்கள்:
இன்ஸ்டாகிராமில் செலினாவை காட்டிலும் இரண்டு பேர் மட்டுமே அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ளனர். அதன்படி, போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ 563 மில்லியன் ஃபாலோவர்களையும், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி 443 மில்லியன் ஃபாலோவர்களையும் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்ததாக செலினா தற்போது 402 மில்லியன் ஃபாலோவர்களையும் கொண்டுள்ளார். அதேநேரம், அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு 619 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளது.
அதிக ஃபாலோவர்களை கொண்ட பெண்கள்:
செலினா மற்றும் கைலி ஜென்னரை தொடர்ந்து, அரியானா கிராண்டே 361 மில்லியன் ஃபாலோவர்களையும், கிம் கர்தாஷியன் 349 மில்லியன் ஃபாலோவர்களையும், பியோன்ஸ் 301 மில்லியன் ஃபாலோவர்களையும், க்ளோ கர்தாஷியன் 298 மில்லியன் ஃபாலோவர்களையும் கொண்டுள்ளனர்.