2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 


தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கிட்டதட்ட 2  மணி நேரம் பட்ஜெட்டை வாசித்த அவர், பல துறைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு போன்றவைகளை அறிவித்தார். 


பெண்கள் பெரிதும் எதிர்பார்த்த “ரூ.1000 உரிமைத்தொகை” வழங்கும் திட்டம் பற்றியும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 


இதனிடையே சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 29 ஆம் தேதி முதல் துறை மீதான விவாதம் தொடங்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.